கிழக்கு மாகாணத்தில் நேற்று (27) வழங்கப்படவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் கல்முனை மேல் நீதிமன்றத்தினால் நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதுவரை நியமனம் எதுவும் வழங்க கூடாதென பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் மேற்கொண்ட அயராத முயற்சியினால் இந்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக -கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான தெரிவில் பெரும் முறைகேடுகள் இடம்பெற்றிருக்கின்றன எனத் தெரிவித்த கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை, இதனை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் மகஜர் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்