பெருந்தோட்ட நிறுவனங்களின் யோசனைக்கு அரசாங்கம் இன்னும் இணங்கவில்லை - தொழில் அமைச்சர்

பெருந்தோட்ட நிறுவனங்களின் யோசனைக்கு அரசாங்கம் இன்னும் இணங்கவில்லை - தொழில் அமைச்சர்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் புதன்கிழமைக்கு முன்னர் முதலாளிமார் சம்மேளனம் இறுதி தீர்மானத்தை அறிவிக்காவிட்டால், 1350 ரூபா அடிப்படை சம்பளத்துடன் 1700 ரூபாவை நாளாந்த சம்பளமாக நிர்ணயித்து மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

1200 ரூபாவை அடிப்படை சம்பளமாக வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ள முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள யோசனையை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை - அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

1350 ரூபா அடிப்படை சம்பத்துடன் 1700 ரூபாவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக வழங்குமாறு கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி தொழில் ஆணையாளரால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தன்று நாம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தோம்.

பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த பின்னரே நாம் இந்த தீர்மானத்தை எடுத்தோம். எனினும் தற்போது சம்பளம் கிடைக்குமா கிடைக்காதா என பலரும் கேள்வியெழுப்புகின்றனர். வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துக்கு ஆட்சேபனையை வெளியிட 15ஆம் திகதி வரை கால அவகாசம் காணப்படுகிறது.

ஆனால் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அதன் யோசனையை எம்மிடம் முன்வைத்துள்ளது. அதற்கமைய 1350 ரூபா அடிப்படை சம்பளமாக அன்றி, 1200 ரூபாவை அடிப்படை சம்பளமாக வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருக்கவில்லை. எவ்வாறிருப்பினும் 1350 அடிப்படை சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்.

எஞ்சிய தொகை வரவுக்கேற்பவும், மேலதிக கிலோவுக்கமையவும் ஒட்டுமொத்தமாக 1700 ரூபாவாக அமைய வேண்டும். முதலாளிமார் சம்மேளனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை நாம் பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் அனுப்பி வைத்திருக்கின்றோம். 1200 ரூபா அடிப்படை சம்பளம் என்ற யோசனைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக முதலாளிமார் சம்மேளன பேச்சாளர் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அது முற்றிலும் பொய்யான செய்தியாகும். அந்த யோசனைக்கு நாம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கவில்லை. அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை தொழிற்சங்கங்களிடம் சமர்ப்பித்துள்ளதை மாத்திரமே நாம் செய்துள்ளோம். எனவே 15ஆம் திகதிக்கு முன்னர் அவர்கள் இணக்கப்பாட்டுக்கு வரா விட்டால் 1350 ரூபா அடிப்படை சம்பளம் உள்ளடங்களாக 1700 ரூபா மொத்த சம்பளம் என அறிவித்து மீண்டும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவோம் என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image