அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதி

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதி

2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3% ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அதற்கமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்று (12) முற்பகல் நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

எவ்வாறாவது அரச ஊழியர்களுக்கு முடிந்த அளவு சலுகைகளை வழங்கியுள்ளோம். அடுத்த ஆண்டு சம்பளத்தை அதிகரிப்பது குறித்தும் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக தனியார் துறையிலும் தோட்டத் துறையிலும் சம்பளத்தை உயர்த்துவதற்கான சமிக்ஞை கிடைத்துள்ளது.

கடந்த சிறுபோகத்தில் வெற்றிகரமான அறுவடையைப் பெற்றோம். கடந்த சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தை போன்று இந்த வெசாக் பண்டிகையிலும் அந்தத் தொகையானது சமூக பொருளாதாரத்தில் இணைக்கப்படும். இந்நிலையில் அடுத்த ஆண்டு 3% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என நம்புகிறோம். அதன் போது மீண்டும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம்.

இது தொடர்பில் தெளிவுடன் செயற்படும் தாதியர் சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். அடுத்த ஆண்டு, நாட்டில் பொருளாதாரம் மேலும் முன்னேற்றமடையும். அந்த பொருளாதாரம் வளர்ச்சியை நாம் ஏற்படுத்தாவிட்டால், எம்மால் இந்த இலக்குகளை அடைவது கடினம்.

தற்பொழுது பணத்தை அச்சிட முடியாது. பணத்தை அச்சிட மாட்டோம் என்று சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அப்படியானால் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் தற்போது பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து வருகின்றோம். அடுத்ததாக தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக விடுபடுவோம். ஆனால் இந்தப் பொருளாதாரப் பிரச்சினை இத்துடன் முடிவடையாது. கடன் தள்ளுபடி செய்தாலும் மிகுதியை மீளச் செலுத்த வேண்டும்.

எனவே, நமது பொருளாதாரத்தை மாற்றுவதற்காக உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு பதிலாக, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும். அந்த நிபந்தனைகளுக்கு நாங்கள் சம்மதித்துள்ளோம். அதிலிருந்து நாம் விலகிச் செல்ல முடியாது. அதிலிருந்து விலகினால், இந்த சலுகைகளை இழக்க நேரிடும். எனவே இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். - என்றார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image