நுண், சிறிய, நடுத்தர அளவிலான நிறுவனங்கன் மீட்சிக்கு அவசியமான பரிந்துரைகள் அடங்கிய ஆய்வறிக்கை வெளியீடு

நுண், சிறிய, நடுத்தர அளவிலான நிறுவனங்கன் மீட்சிக்கு அவசியமான பரிந்துரைகள் அடங்கிய ஆய்வறிக்கை வெளியீடு

பொருளாதார மீட்சிக்கு சமாந்தரமாக நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களின் நிலையான மீட்சியை உறுதிப்படுத்துவதில் கவனம்செலுத்துவதுடன், அதனை முன்னிறுத்திய கூட்டிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமென சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தொழிலாளர் உத்திகள் பிரிவின் தலைவர் கலாநிதி ஷேர் வெரிக் வலியுறுத்தியுள்ளார்.

 தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாண்மைகள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகளைப் புரிந்துகொள்வதற்கு தொழில் அமைச்சுக்கும், ஏனைய சமூகக்குழுக்களுக்கும் உதவும் நோக்கில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை கிளையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை உள்ளடக்கிய 'பலதரப்பட்ட நெருக்கடிகளின் விளைவாக இலங்கையின் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் மீது ஏற்பட்டுள்ள தாக்கம்' எனும் தலைப்பிலான ஆய்வறிக்கையின் வெளியீட்டு நிகழ்வு நேற்று (09) வியாழக்கிழமை கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

 தொழிலாளர் சந்தையை மீட்டெடுப்பதற்கும், சமகால மாற்றங்களுக்கு ஏற்றவாறான உத்திகளை வகுப்பதற்குமான தகவல்களை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வானது இவ்வாண்டு ஜனவரி - மார்ச் மாதத்துக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக்கொண்டு அமைந்திருக்கின்றது.

அதன்படி பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த 500 நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் தொடர்பான கணக்கெடுப்பு, நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட 50 நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் தொடர்பான கணக்கெடுப்பு, அரச மற்றும் அரச சார்பற்ற கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் ஆகிய மூன்றுமே இந்த ஆய்வுக்கான பிரதான தகவல் மூலங்களாகும்.

 இந்த ஆய்வின் பிரகாரம் நாட்டிலுள்ள அநேகமான நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் கடன்கள் மற்றம் குத்தகைகளை திருப்பிச்செலுத்த இயலாமை, இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக மூலப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடு, எரிபொருள் விலையேற்றம், மின்கட்டண உயர்வு போன்றவற்றின் காரணமாக அதிகரித்த செலவினங்கள் மற்றும் அவற்றுக்கான தட்டுப்பாடு, புலம்பெயர்வின் காரணமாக திறமையான தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை, பணவீக்கத்தின் விளைவாக நுகர்வோர் மீது ஏற்பட்ட மிகையான அழுத்தத்தினால் ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பேக்கரி உற்பத்திகள் போன்றவற்றுக்கான கேள்வி வீழ்ச்சியடைந்துள்ளமை, உக்ரேன் - ரஷ்ய போர் மற்றும் இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் போன்ற உலகளாவிய நிலைவரங்களின் காரணமாக ஏற்றுமதிகளுக்கான தேவைப்பாட்டில் வீழ்ச்சி, உரத்தட்டுப்பாட்டினால் விவசாயப் பயிர்ச்செய்கை விளைச்சலில் வீழ்ச்சி போன்ற நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 இவ்வாறானதொரு பின்னணியில் வேலைவாய்ப்புக்கள் மற்றும் நெகிழ்வான வணிகங்களை உருவாக்குதல், திறன்களையும் பொருத்தப்பாடுடைய தன்மையையும் மேம்படுத்துதல், சிறந்த சேவை வழங்கலுக்கான ஒழுங்குமுறை சீர்திருத்தத்தை மேற்கொள்ளல் ஆகிய மூன்று பிரதான விடயங்களை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் மூலம் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களின் மீள்நிலைத்த தன்மையை உறுதிப்படுத்தமுடியும் என அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய உலகளாவிய பொருளாதார சூழலைக் கட்டியெழுப்பல், நுண்பாகப் பொருளாதார கொள்கை மறுசீரமைப்புக்களுடன் தொடர்புடைய தொழிலாளர் சந்தைத் தாக்கங்களைக் கண்காணித்தல், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்களைக் குறைப்பதற்கு ஏதுவான கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல், குறிப்பிட்ட தொழிற்துறைகளுக்கு ஏற்றவாறான ஆதரவை வழங்கல், பொருளாதாரத்தின் விநியோகச்சங்கிலியை வலுப்படுத்தல், சந்தை வாய்ப்புக்களை ஊக்குவித்தல், ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கல் மூலம் தொழிலாளர் திறனை மேம்படுத்தல், உற்பத்தித்திறன் அதிகரிப்பு மற்றும் மனித மூலதனப் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப்படுத்தல், ஊதியம் பெறும் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல், நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பைக் கட்டியெழுப்பல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்தமுடியும் எனவும் அவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இதுஇவ்வாறிருக்க இந்த ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தொழிலாளர் உத்திகள் பிரிவின் தலைவர் கலாநிதி ஷேர் வெரிக், கடந்த சில வருடங்களாக கொவிட் - 19 வைரஸ் பெருந்தொற்று மற்றும் பொருளாதார மந்தநிலை போன்றவற்றின் விளைவாக உலகநாடுகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும், தற்போது உலகளாவிய ரீதியில் நிலவும் நாடுகளுக்கு இடையிலான போர் உள்ளிட்ட சமகால நிலைவரங்கள் இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி அண்மையகாலங்களில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் கடன்மீள்செலுத்துகை நெருக்கடிக்கு முகங்கொடுத்துவருவது பற்றி பிரஸ்தாபித்த அவர், நுண்பாகப்பொருளாதார சிக்கல்கள் மற்றும் கடன்களில் சமநிலையின்மை போன்றவற்றால் இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்தார்.

அதேவேளை பொருளாதார மீட்சிக்கு சமாந்தரமாக நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களின் நிலையான மீட்சியை உறுதிப்படுத்துவதில் கவனம்செலுத்துவதுடன், அதனை முன்னிறுத்திய கூட்டிணைந்த நடவடிக்கைகளின் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.

மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image