வங்கிகளில் பணியாற்றிய பத்தாயிரம் ஊழியர்கள் பணி விலகல்

வங்கிகளில் பணியாற்றிய பத்தாயிரம் ஊழியர்கள் பணி விலகல்

இலங்கையின் வங்கித் துறையில் பணியாற்றிய சுமார் 10,000 ஊழியர்கள் பணி விலகியுள்ளனர். அவர்களில் ஒரு தொகையினர் புலம்பெயர்ந்துள்ளனர் என்கிறார் ஹட்டன் நேஷனல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ் 

இலங்கை மத்திய வங்கியின், வங்கிக் கற்கைகளுக்கான நிலையத்தினால் நேற்று (26) நடைபெற்ற இணையப் பேரவையில் உரையாற்றிய சந்தர்ப்பத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பெரும் எண்ணிக்கையான புதிய ஊழியர்களை உள்வாங்குவதில் வங்கிகள் கவனம் செலுத்தியுள்ளன . HNB இல், 5,000 ஊழியர்களுக்கு மேல் பணியாற்றுகின்றனர். அவர்களின் இடைவிலகல் , ஆண்டுதோறும் 3-4% ஆக இருந்தது, ஆனால் 2022 இல் 7-8% ஆக உயர்ந்தது, 400 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வங்கியை விட்டு வெளியேறினர், அவர்களில் 170 பேர் புலம்பெயர்வு நோக்கில் வௌியேறியுள்ளனர். 2023ம் ஆண்டு இடைவிலகியோரின் எண்ணிக்கை 520இற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் 225 பேர் வரை புலம்பெயரும் நோக்கில் பணியை விட்டு நீங்கியுள்ளனர்.

ஆட்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் வங்கிகள் உள்ளன. கனிஷ்ட ஊழியர்கள் பணி விலகுவதனால் அவ்வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வது பாரிய பிரச்சினையாக இருக்காது. இன்று பாடசாலையில் இருந்து வௌியேறுபவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர் இருந்தவர்கள் போலில்லை.

புதிதாக சேர்க்கப்படும் ஊழியர்கள் வங்கியின் விதிமுறைகள் பற்றி போதுமான தௌிவுள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். எனவே வாடிக்கையாளர்களைக் கையாள்வதில் சில சில சிக்கல்கள் தோன்றக்கூடும் என்றும் அவர் சுட்டிகாட்டினார்.

இலங்கையில் உரிமம் பெற்ற 24 வணிக வங்கிகள் நாட்டிற்குள் இயங்குகின்றன மற்றும் Capital Alliance Ltd. (CAL) இன் அறிக்கையின்படி, 2022 இல் பட்டியலிடப்பட்ட ஒன்பது வணிக வங்கிகளில் இருந்து சுமார் 3,000 ஊழியர்கள் வெளியேறியுள்ளனர், இது 2021 உடன் ஒப்பிடும்போது 67.8% அதிகமாகும்.

இலங்கை மத்திய வங்கி (CBSL) தரவுகளின்படி, 2023 இன் முதல் காலாண்டில் சுமார் 147,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், ஒவ்வொரு மாதமும் 24,000 க்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

இதே காலப்பகுதியில் மொத்தமாக 683,363 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

த மோர்னிங்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image