நாட்டின் கடன் மறுசீரமைப்பு என்ற போர்வையில் தொழிலாளருக்கு சொந்தமான பணத்தை கொள்ளையடிக்க அனுமதிக்கப்போவதில்லையென இன்று (25) கொழும்பு - புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளருக்கு சொந்தமான EPF மற்றும் ETF நிதியை கொண்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தன. காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் சில வீதிகளுக்கு பிரவேசிப்பதற்கு கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதற்கமைய, ஓல்கோட் மாவத்தை, யோர்க் மாவத்தை, வங்கி வீதி, லோட்டஸ் மற்றும் சத்தம் வீதி ஆகியவற்றுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அடிமைத் தொழிலாளர் சட்டத் திருத்தத்தை உடனடியாக மீளப் பெறவேண்டும், தொழிலாளர் நிதியில் கை வைக்காதே, போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் பல தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போராட்டத்தை தொழிற்சங்க ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.