தொழில் சட்டம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான விடயங்களை தெரிவிப்பவர்களுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒரு நூற்றாண்டு கால வரலாற்றுக்கு உரிமைகோரும் இலங்கையின் தொழில் சட்டத்தை நவீன உலகத்திற்கு ஏற்றவகையில் மாற்றுவதற்காக ,பொது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் பணியை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தற்போது ஆரம்பித்துள்ளது. அது தொடர்பான சட்ட மூலத்திற்கான பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
இருப்பினும் பொது மக்களின் கருத்துக்களை பெறும் போது , மக்களை தவறாக வழிநடத்தும் தகவல்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான உண்மைக்குப்புறம்பான பிரசுரங்களினால் பொது மக்கள் மத்தியில் தொழில் சட்டம் குறித்து தவறான நிலைப்பாடு ஏற்படக்கூடும்.
இதனால் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவோர் தொடர்பில் உடனடியாக கண்டறியுமாறு தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி ,பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.