மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு நன்கொடையாக கிடைத்த மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த விசாரணையின் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான சட்ட மற்றும் ஒருக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி நேற்றைய தினம் குறித்த விசாரணைகளுக்காக இரண்டு விசாரணை குழுக்கள் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு சென்றுள்ளன.
இதன்போது, வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகரவிடம் ஆரம்ப விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை நேற்றைய தினமே சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
22 ஆயிரம் ரூபா பெறுமதியான புற்றுநோய் மருந்தை, 21 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்தபோது, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவால் சந்தேகநபர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில், அவர் முற்படுத்தப்பட்டபோது, குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருந்தாளரால், விற்பனை செய்யப்பட்டது, வைத்தியசாலைக்கு நன்கொடையாக கிடைத்த மருந்தா? அல்லது வைத்தியசாலைக்கு உரித்தான அரசாங்கத்தின் மருந்தா? என்பதைக் கண்டறிய விசாரணை முன்னெடுக்கப்படுவதாக, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.