உடனடியாக தொழிற்சங்க நடவடிக்கை - எச்சரிக்கும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்!
ரயில் திணைக்களத்தின் வர்த்தக பிரிவுக்கு தகுதியான பிரதி பொது முகாமையாளரை (வணிகப் பிரிவு) நியமிக்க போக்குவரத்து அமைச்சு தவறினால் உடனடியாக தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்ககப்படும் என்று ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் நேற்று (09) எச்சரித்துள்ளது.
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் சாமரவின் கையெழுத்துடன் குறித்த விடயம் தொடர்பான கடிதம் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஊழல் நிறைந்த, பல பதவியுயர்வுகள் தாமதமாவதற்கு காரணமாக இருந்த அதிகாரியொருவரை குறித்த பதவிக்கு நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகாரி தொடர்பாக அமைச்சருக்கு முறைப்பாடு செய்யப்பட்டபோதிலும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பதவியுயர்வு வழங்க ரயில் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பதவியுயர்வை உடனடியாக ரத்து செய்ய அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ள அச்சங்கம், உரிய அதிகாரியை அப்பதவிக்கு நியமிக்குமாறும் தீர்க்கப்படாத தமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறும் அச்சங்கம் அமைச்சரிடம் கோரியுள்ளது.
பிரதி பொது முகாமையாளர் பதவிக்கு குறித்த அதிகாரி நியமிக்கப்பட்டால் எவ்வித தயக்கமுமின்றி தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் தொழிற்சங்க நடவடிக்கையினால் பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகள் ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.