பெருந்தோட்ட நிறுவனம் தொழிலாளர்களின் கொழுந்தினை கொள்ளையடிக்கின்றது. - கணபதி கனகராஜ்
பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கும் தேயிலை கொழுந்தின் அளவை குறைத்து மதிப்பிடும் நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக தாம் நிறுத்தல் அளத்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்து இருந்தோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வௌியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
முறைப்பாட்டுக்கு அமைய கடந்த 02ம் திகதி பிற்பகல் வேலையில் நுவரெலியா மாவட்ட செயலக நிறுத்தல் அளத்தல் திணைக்கள அதிகாரிகள் பொகவந்தலாவை மேற்பிரிவு தோட்டத்திற்கு விஜயம் செய்து நிறுத்தல் அளத்தல் கருவிகளை பரிசீலனை செய்த போது பல வருடங்களாக குறித்த கருவிகள் புதுப்பிக்கப்படாமல் இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு தொழிலாளியும் பறிக்கும் கொழுந்தில் இருந்தும் ஒரு நேரத்திற்கு மூன்று கிலோகிராம் என ஒரு நாளைக்கு சுமார் 10 கிலோகிராம் வரையிலான தேயிலையினை கழித்துக் கொண்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் நடைமுறையினை அவர்கள் பின்பற்றி வருகின்றார்கள் என்றும் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
மேலும் இவ்வாறு தேயிலை கொழுந்தினை பிடித்துக் கொள்ளும் தோட்ட நிர்வாகம் அவர்கள் நிர்ணையிக்கும் கொழுந்தின் அளவை தொழிலாளர்கள் பறிக்கவில்லை என்றால் அரை நாள் சம்பளம் அல்லது கிலோகிராம்க்கு ரூபா 40 வழங்கும் நடைமுறையையும் பின்பற்றி வருகின்றது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் நிறுத்தல் அளத்தல் அதிகாரிகளின் பரிசீலனையின் போது கொழுந்தின் நிறையில் குழறுப்படிகள் காணப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டதால் நிறுத்தல் அளத்தல் கருவிகள் திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் முறைப்பாடு தொடர்பாக வழக்கு தொடரவும் அதிகாரிகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டடுள்ளதாகவும் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
மேலும் பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்தின் சகல தோட்டங்களிலும் இந்த நிலமை காணப்படுவதனால் உடனடியாக புதிய டிஜிட்டல் அளத்தல் கருவிகளை நிறுத்தி பழைய நிறுத்தல் அளத்தல் கருவிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால் எல்லா தோட்டங்களுக்கும் சென்று பெருந்தோட்ட நிறுவனம் கொழுந்தில் கொள்ளையடிக்கம் நிலையை தொழிலாளர்களுக்கு எடுத்துக் கூற வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.