பாடசாலைகளில் தரம் 2 முதல் 11 வரையில் (தரம் 6 தவிர்ந்த) மாணவர்களை உள்வாங்குவதற்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள சுற்றறிக்கை ஏற்பாடுகளை மேலும் நெறிப்படுத்துவதன் ஊடாக, இடைநிலை வகுப்புக்களில் வேறு பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்ளின் உண்மை நிலையை கண்டறிந்து, மாணவர்களுக்கும் நியாயமான மற்றும் அணுகக்கூடிய வாய்ப்புகளை வழங்கும் வகையில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
சில தரமான பிரபல பாடசாலைகளில், ஒரு வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 50-55 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களின் பயிற்சிப்கொப்பிகள் உள்ளிட்ட விடயங்களில் கூட ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இது தொடர்பான விடயங்கள் கல்வி அமைச்சின் கவனத்திற்கு அடிக்கடி கொண்டுவரப்படுகின்றன.
தற்போது நடைமுறையில் உள்ள, தரம் 1-5 வரை ஒரு வகுப்பில் ஆகக்கூடுதலாக 40 மாணவர்களும், தரம் 6-13 வரையிலான ஒரு வகுப்பில் ஆகக்கூடுதலாக 45 மாணவர்களும் என்ற அந்த நடைமுறையில்மாற்றம் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.