பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (16) தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அமைச்சர்,
தேயிலையின் விலை எமது ஆட்சிக் காலத்தில் பாரியளவில் உயர்ந்துள்ளது. சிறுதோட்ட உரிமையாளர் என்றவகையில் சஜித் பிரேமதாஸ இதனை நன்கறிவார். மத்திய வங்கியின் அறிக்கையின்படி வரலாற்றில் முதற்தடவையாக கடந்த வருடத்திலேயே தேயிலைத் தொழிற்துறைக்கு 3.8 பில்லியன் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இது பொய்யென எதிர்க்கட்சி தலைவர் சஜித் நிரூபித்தால் நாளையே அமைச்சுப் பதவியை துறக்க தயாராக இருக்கிறேன். மீள்பயிரிடல் குறைவடைந்துள்ளது. அதுபோல எதிர்க்கட்சி தலைவர் கூறுவது போல அதிக விலைக்கே உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உலக சந்தையில் உரத்தின் விலை அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம்.
இரசாயன உரம் மீதான தடையால் தேயிலைத் தொழிற்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரசாயன உரம் மீதான தடை விதிக்கப்பட்டபோது பெருந்தோட்டத்துறை அமைச்சராக நானே அதனை முதலில் எதிர்த்தேன். அதுபோல கிளைபோசைட் உரத்துக்கு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விதிக்கப்பட்ட தடை உத்தரவு காரணமாகவும் தேயிலை உற்பத்தி கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டது நல்லாட்சி அரசாங்கத்தால் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வேதனத்தை வழங்க முயற்சிக்கப்பட்டாலும் அதனை எங்களது அரசாங்கமே சாத்தியப்படுத்தியது.
கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக ஆயிரம் ரூபாய் வேதனத்தை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் மறுத்ததால், சம்பள நிர்ணயச் சபையின் ஊடாக அதனை நாம் பெற்றுகொடுத்தோம். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நாள் வேதனம் போதாது என்பதால் வேதனத்தை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மூலம் - சூரியன் செய்திகள்