அனைத்து அரச சேவைகளுக்கும் ஒன்றிணைந்த பொறிமுறை

அனைத்து அரச சேவைகளுக்கும் ஒன்றிணைந்த பொறிமுறை

அனைத்து அரச சேவைகளுக்கும் ஒன்றிணைந்த பொறிமுறையொன்றை அமைப்பதற்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

அரச சேவையில் பிரதான செயற்திறன் குறிகாட்டிகளை (KPIs) ஸ்தாபிப்பதற்கான கொள்கைகளை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உப குழு அண்மையில் (08) கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் அரச பொறிமுறையுடன் தொடர்புடைய சேவைகள் ஒருங்கிணைந்ததாக செயற்படுவதற்கு காணப்படும் சட்டரீதியான தடைகள் தொடர்பிலும், தற்பொழுதுள்ள பிரதான செயற்திறன் குறிகாட்டிகளையும் கருத்தில் கொள்ளும் போது அந்தந்த நிறுவனங்களுக்குத் தனித்துவமான வேறுபாடுகள் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அனைத்து அரச சேவைகளுக்கும் சமனாக செயற்படுத்தக்கூடிய பிரதான செயற்திறன் குறிகாட்டிகளை உருவாக்குவது சவாலானது எனவும், அதற்கு மேலதிகமாக பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் போது மிகவும் வினைத்திறனான அரச சேவையொன்றைக் கட்டியெழுப்புவது தொடர்பான கொள்கைரீதியான முன்மொழிவுகளைத் தேசிய பேரவை ஊடாக பாராளுமன்றத்துக்கு முன்வைத்து அனுமதியைப் பெற்றுக்கொள்வது தனது குழுவின் நோக்கமாகும் என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

இந்தப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்ற நாடு தழுவிய அனைத்து சேவைப் பிரதிநிதிகளினதும்  கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக உப குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

பிரதான செயற்திறன் குறிகாட்டிகளை தயாரிப்பதற்கு மேலதிகமாகத் தற்பொழுது அரச பொறிமுறையில் உள்ள நிறுவனக் கட்டமைப்பிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என இங்கு வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது, அந்தந்த அமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்களை தேவைக்கேற்ற வகையில் மீள் கட்டமைப்பு செய்வதன் அவசியம் குறித்தும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

20 அமைச்சுக்களை நிரந்தரமாகப் பேணி ஏனைய 10 அமைச்சுக்களை நெகிழ்வானதாகப் பேணுவதற்கு  எதிர்பார்ப்பதாக உப குழுவின் தலைவர் குறிப்பிட்டார். குறித்த 20 அமைச்சுக்களுக்கும் சொந்தமான நிறுவனங்கள், தேவையான இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை மற்றும் அந்த இராஜாங்க அமைச்சின் கீழ் வரும் திணைக்களங்கள் எவை என்பதை அரசியலைப்பின் ஊடாக நிறுவுவதற்கு தேவையான பின்னணியை உருவாக்குவது தனது உப குழுவின் எதிர்பார்ப்பாகும் என உப குழுவின் தலைவர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

ஐந்து இலட்சம் சதுர கிலோமீட்டர் கொண்ட இலங்கைக்கு சொந்தமான கடல் வலயத்தை முகாமைத்துவம் செய்ய எந்தவொரு அரச நிறுவனமும் இல்லை எனச் சுட்டிக்காட்டிய இலங்கை கணக்காளர் சேவை சங்கம், அரச பொறிமுறை தோல்வியடைவதற்கு முக்கிய கரணம் நாட்டின் இலக்கு யாது என்பது தொடர்பில் எண்ணக்கரு இல்லாமையே என குறிப்பிட்டது. இலங்கை தெற்காசியாவின் முதலாவது அபிவிருத்தி அடைந்த நாடு எனும் எண்ணக்கருவில் அரச சேவைக்கு ஒருங்கிணைத்த பொறிமுறையொன்றை தயாரிப்பது பொருத்தமானது என சங்கம் குழுவில் பிரேரித்தது.  

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பர்னாந்து, பவித்ரா வன்னிஆராச்சி, வஜிர அபேவர்தன மற்றும் எம். ராமேஸ்வரன் ஆகியோரும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், இலங்கை நிர்வாக சேவையாளர்களின் சங்கம், இலங்கை ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கம், இலங்கை கல்வி நிர்வாக சேவைச் சங்கம், இலங்கை கணக்காளர் சேவை சங்கம், அரச சேவை பொறியியலாளர்களின் சங்கம், இலக்கை திட்டமிடல் சேவை சங்கம், அரச நில அளவையாளர் சங்கம், இலங்கை விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் சங்கம், அரசு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கம், இலங்கை விவசாய சேவை பட்டதாரிகளின் சங்கம்,  அரசு அறிவியல் அதிகாரிகள் சங்கம், இலங்கை கட்டிடக்கலை சேவைகள் சங்கம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image