பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்

பதுளை மாவட்டத்தில் ஹாலிஎல பிரதேசத்தில் தோட்ட நிர்வாக அதிகாரி மற்றும் பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளாகிய தொழிலாளியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (04) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடிகள் மாத்திரமின்றி , கம்பனிகளின் அடாவடிகளையும் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

பதுளை மாவட்டத்தில் ஹாலிஎல - ரொசட் தோட்டத்தில் தொழிலாளியொருவர் மீது தோட்ட முகாமைத்துவம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளது. தோட்ட அதிகாரி பொலிஸாருடன் இணைந்து குறித்த தொழிலாளியை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான தொழிலாளி மிகவும் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழில் பிணக்குகளை பொலிஸ் நிலையங்களில் தீர்த்து வைக்க வேண்டிய மோசமான கலாச்சாரம் பெருந்தோட்டங்களில் வளர்ச்சியடைந்து வருகின்றது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பால் குளவி கொட்டு , சிறுத்தை அச்சுறுத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நாட்டில் தொழில் சட்டம் ஏன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படாமலுள்ளது ? பதுளையில் தொழிலாளி தாக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளேன். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image