ஆசிரியைகளுக்கான ஆடை கோரிக்கை தொடர்பில் ஜோசப் ஸ்டாலின் விளக்கம்

ஆசிரியைகளுக்கான ஆடை கோரிக்கை தொடர்பில் ஜோசப் ஸ்டாலின் விளக்கம்

எந்தவொரு நபருக்கும் தனக்கு ஏற்ற ஆடையை தெரிவு செய்யும் ஜனநாயக ரீதியான சுதந்திரம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாடசாலை ஆசிரியைகள் வசதியான ஆடைகளை அணிந்து வர அனுமதிப்பது இந்நாட்டின் கலாசாரத்திற்கு புறம்பானது என மகாசங்கத்தினர் விடுத்துள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் உடையை மாற்றலாம், ஆனால் துறவறம் பூண்டவர்கள் தங்களது ஆடைகளை மாற்ற முடியாது என்பதால், இந்த கோரிக்கையை அந்நியப்படுத்த வேண்டாம் என்று ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

புடவை மற்றும் ஒசரி அணிய சிரமப்படும் ஆசிரியர்களுக்காகவே நாம் இலகுவான ஆடைகளை கோருகிறோம். இது அனைத்து ஆசிரியர்களினது உடைகளையும் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை இல்லை.

இந்த கோரிக்கை தவறானது என மகாசங்கத்தினர் எதிர்கின்றனர். கல்வித்துறையில் உள்ள 247,000 ஆசிரியர்களில் 74 சதவீதத்துக்கும் அதிகமாக பெண்களே உள்ளனர்.

புடவையை அறிமுகப்படுத்திய இந்தியாவில் கூட புடவை தவிர்ந்த ஏனைய ஆடைகளை அணியும் ஆசிரியர்களும் உள்ளனர். கல்வியில் சிறந்த நாடாகவுள்ள பின்லாந்தில்கூட இவ்வாறான கட்டுப்பாடுகள் இல்லை.

சில பிக்குமார் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, குளிரிலிருந்து பாதுகாப்புபெற வேறு ஆடைகளை அணிகின்றனர். இதனை பிக்குமாரை அவமதிப்பதற்காக கூறவில்லை.

ஆசிரியர்களுக்கு ஆடை சுதந்திரம் அளிப்பதால் மகாசங்கத்தினர் குறிப்பிடுவது போன்று கலாசாரம் எந்த வகையிலும் அழிக்கப்படாது. வளர்ந்து வரும் சமூகத்தில் இவ்வாறான தடைகளை ஏற்படுத்துவது பொருத்தமற்றது.

இதேவேளை, 7 ஆம் தரத்துக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பாக தெளிவூட்ட புத்தகமொன்று வெளியிடப்பட்டது.

அது கலாசாரத்தை சீரழிப்பதாகக்கூறி அவற்றை மீளப்பெற்றனர். இதன்விளைவாகத் தான், இன்று பாலியல் துஷ்பிரயோகங்கள் உயர்வடைந்துள்ளது.

எனவே, ஆடை தொடர்பான விடயங்களில் கல்வியமைச்சர் தலையிட்டு தீர்வொன்றை வழங்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம் - சூரியன் செய்திகள் 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image