தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று பிற்பகல் நடத்த திட்டமிட்டுள்ள போராட்டத்திற்கு கொழும்பு, கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக அல்லது அதற்கு அண்மித்த பகுதியில் இடமளிக்கப் போவதில்லை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
குறித்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ள தரப்பினருக்கு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த போராட்டத்தை மக்களுக்கு இடையூறு இன்றி நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டம் காரணமாக வீதிகள் இடைமறிக்கப்படுவதால் அரச, தனியார் நிறுவனங்களில் தொழில்புரிந்து வீடு திரும்பும் சேவையாளர்களுக்கும், கோட்டை மற்றும் புறக்கோட்டை மொத்த வியாபார நடவடிக்கைகளும், பாதிப்பு ஏற்படக்கூடும் என காவல்துறையின் அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீதிகளை இடைமறித்து அல்லது போக்குவரத்துக்கு தடை ஏற்படும் பட்சத்தில், மக்களை அசௌகரியங்களில் இருந்து காப்பதற்காக காவல்துறை கட்டளை சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என காவல்துறையின் அறிவுறுத்தலில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று பிற்பகல் மருதானை எல்பிஸ்டன் கலையரங்கத்திற்கு அருகில் ஆரம்பிக்கவுள்ள போராட்டம் பேரணியாக கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை நோக்கி செல்லவுள்ளது.
இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சில பொது அமைப்புக்களுக்கு இடையே நேற்று புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில அரசியல் கட்சிகள் அதில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளன.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், மாணவர் செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த போராட்டம் காரணமாக கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மூலம் - சூரியன் செய்திகள்