நீர், மின் கட்டண பட்டியல்களுக்கான தபாலக சேவைக் கட்டணம் அதிகரிப்பு
தபால் நிலையங்கள் ஊடாக செலுத்தப்படும் நீர் மற்றும் மின்சார கட்டண பட்டியல்களுக்காக அறவிடப்படும் சேவை கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேவைக் கட்டண அதிகரிப்புக்கான சுற்றுநிருபம் அனைத்து அஞ்சல் அலுவலக பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
முன்னதாக மின்சார மற்றும் நீர் கட்டணங்களுக்காக 5 ரூபா மாத்திரமே அறவிடப்பட்ட நிலையில் தற்பொழுது 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 20 ரூபாய் அறவிடப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையினால் இதுவரை அஞ்சல் திணைக்களத்திற்கு நூற்றுக்கு இரண்டு வீதம் செலுத்தப்பட்டு வந்தது.
தற்போது அந்த கட்டணத்தை நூற்றுக்கு ஒரு வீதமாக குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையால், மின் பாவனையாளர்களிடமிருந்து சேவை கட்டணத்தை அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அஞ்சல் அலுவலகங்களுக்கான தினசரி செலவினம் அதிகரித்தமையும் சேவை கட்டணத்தை அதிகரிப்பதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.