'பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வலுப்படுத்தல்' சட்டமூலம் தொடர்பில் அவதானம்
உத்தேச 'பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வலுப்படுத்தல்' சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற விசேட குழுவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு, உத்தேச 'பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வலுப்படுத்தல்' சட்டமூலத்தை வரைபு செய்வதன் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடலொன்றை நடத்தியது.
2016-2020 இல் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை (ளுபுடீஏ) தொடர்பான பல்துறை தேசிய செயற்திட்ட அமுலாக்கம் பற்றிய முன்னேற்ற மீளாய்வு முன்வைப்பை அடுத்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
விசேட குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷனி பர்னாந்துபுல்லே தலைமையில் அண்மையில் (20) கூடியபோதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
விசேட குழுவில் கலந்துரையாடப்பட்ட பரிந்துரைகள் அனைத்தையும் உள்ளடக்கிய வரைபை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் அனுப்புவதற்கு விசேட குழு உறுப்பினர்கள் இதன்போது இணங்கினர்.
பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை (ளுபுடீஏ) 2016-2020 தொடர்பான பல்துறை தேசிய செயற்திட்ட அமுலாக்கத்தின் முன்னேற்றத்தை விசேட குழு அங்கீகரித்ததுடன், புதிய திட்டத்தில் சூழ்நிலைசார் விடயங்களை உள்ளடக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க, டயனா கமகே, பியல் நிஷாந்த டி. சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, எரான் விக்ரமரத்ன, பாராளுமன்ற பணியாட்கள் தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர, அரச அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.