ஆசிரியர்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக் கொடுப்பனவு: கல்வி அமைச்சரிடம் கோரிக்கை!

ஆசிரியர்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக் கொடுப்பனவு: கல்வி அமைச்சரிடம் கோரிக்கை!
ஆசிரியர்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக் கொடுப்பனவை வழங்காதுள்ளமை  தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப்  தெரிவித்துள்ளார்.
மேலும் கடிதத்தின் உள்ளடக்கமாக
 
2021 க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர மதிப்பீட்டுக் கொடுப்பனவை இதுவரை வழங்கி முடிக்காது பரீட்சைத் திணைக்களத்தால் 2022 க.பொ.த உயர்தர பரீட்சை மதிப்பீடு தொடர்பான விண்ணப்பப்  படிவத்தை 2022.10.07 வரை பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
 
ஆயினும் இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கு முன்னர் கடந்த கால விடைப்பத்திர மதிப்பீடுகளை மேற்கொண்ட ஆசிரியர்களுக்கு உரிய கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்யாமை தொடர்பாக கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்கும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உரிய கொடுப்பனவை வழங்கி முடிக்கும் வரை விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளும் இறுதித் திகதியை 2022.10.21 வரை  நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.
 
02)அவ்வாறு செய்யப்படாத விடத்து வருங்கால பரீட்சை மதிப்பீடு ,பரீட்சைக் கடமை தொடர்பாகவும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்காத நிலை தவிர்க்க முடியாததாகிவிடும். மேலும் வருடாந்த வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் உரிய விடயத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி உரிய உத்தியோகத்தர்கள் கடமைகளை நிறைவேற்றிய பின்னர் வழங்காமல் நீண்டகாலம் இழுத்தடிப்பு செய்வதற்கு எந்தவித உரிமையும் பரீட்சைத் திணைக்களத்துக்கு இல்லை என்பதனைக் கண்டித்து அவதானத்துக்குக் கொண்டு வருகிறோம்.
 
03)விசேடமாக எரிபொருள் போக்குவரத்துப் பிரச்சினைகளினால் பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் கடமைகளை மேற்கொண்டதற்கான கொடுப்பனவை வழங்காத பரீட்சைத் திணைக்களம் க.பொ.த உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டிற்காக விண்ணப்பப் படிவத்தை வெளியிடத் தீர்மானித்தமை எதன் அடிப்படையில்  என்பதனை விளக்க வேண்டும்.
 
இந்த நிலைமைகளின்கீழ் எதிர்வரும் பரீட்சைகளை நடத்துவது மற்றும் பரீட்சைத்தாள் மதிப்பீடுகள் சாவால்களுக்கு உட்படுவதைத் தடுக்க முடியாது  என்பதுடன் ,பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குப் பாரிய அநீதி இழைக்கப்படும் என இலங்கை ஆசிரிய சேவை அங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
 
இந்நிலை தோன்றுவதைத் தடுக்கும் வகையில் உரிய மதிப்பீட்டுக் கொடுப்பனவை உடனடியாகச் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றோம். அவ்வாறு செய்யப்படாதவிடத்து ஏற்படும் நிலைமைகளுக்கு பரீட்சைத் திணைக்களம் உட்பட கல்வி அமைச்சும் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதனை  வலியுறுத்தி அவதானத்திற்குக் கொண்டு வருகிறோம் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image