பெருந்தோட்டங்களில் உணவு உற்பத்திக்கு காணி வழங்க கம்பனிகள் தயார்
பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு உயர்வு என்பன பெருந்தோட்டங்களில் ஒரு பஞ்ச நிலையை உருவாக்கலாமென எதிர்பார்க்கப்படுவதால் அதை சமாளிக்கும் வகையில் பெருந்தோட்ட நிர்வாகங்கள் தயாராகி வருவதாக பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாமென்ற நிலையில் தோட்ட சிறுவர் அபிவிருத்தி நிலையங்களைச் சுற்றி ஆயிரம் மாதிரி மரக்கறித் தோட்டங்கள் அமைக்கப்படவுள்ளதோடு பெருந்தோட்டங்களில் இருபதாயிரம் மரக்கறித் தோட்டங்கள் உருவாக்கப்படவுள்ளதாக கூறியுள்ள ரொஷான் இராஜதுரை, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நிர்வாகங்களை அணுகி விவசாயம் செய்ய விரும்புவதாகச் சொன்னால் அதற்கான காணிகளை நிர்வாகங்கள் விடுவிக்கத் தயாராக இருப்பதாகவும் அதற்கான விதை மற்றும் பசளை தேவைகளை தனியார் சமூக நிறுவனங்களின் உதவியோடு பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை தோட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் மரவள்ளி, சோளம், உருளைக்கிழங்கு, வாழை, மிளகாய், கத்தரி, கறிமிளகாய், வெண்டி, பீட்ரூட் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டிருப்பதாகவும் தொழிலாளர்கள் விண்ணப்பித்தால் அவற்றை சந்தைப்படுத்தவும் நிர்வாகங்கள் உதவும். உணவுப் பற்றாக்குறை மற்றும் போஷாக்கின்மைக்கு எதிரான தேசிய திட்டத்தில் தோட்டக் கம்பனிகள் இவ்வாறு பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளன.
இது இலாபநோக்கற்றது. பெருந்தோட்ட சமூகம் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியென அவர் மேலும் கூறியுள்ளார்.
தோட்ட சங்கக் கடைகள் அல்லது ச.தோ.ச கிளைகளில் தமக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கி சம்பளத்தில் திருப்பிச் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலதோட்ட நிர்வாகங்கள் ஆறு மாதத்துக்கு தேவையான அரிசி மற்றும் மாவை அவசரத் தேவைக்காக சேமித்து, வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம் தினகரன்