தொழிற்சங்கங்களினால் ஹர்த்தால் அறிவிப்பு

தொழிற்சங்கங்களினால் ஹர்த்தால் அறிவிப்பு

தொழிற்சங்க போராட்டம் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்தார் இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறி இருக்கின்றார். இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் நாட்டில் இருந்து தப்பி சென்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். நாட்டு மக்கள் திரண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இதற்கு காரணமாகும். இது மக்கள் அதிகாரம். மக்கள் சக்தியாகும். எல்லா மக்களும் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டம் காரணமாகத்தான் அவர் நாட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

 முறையான செயற்பாடுகளுக்கு அமையவே பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின் பேரில் அவர் நாட்டில் இருந்து வெளியேறியதாக விமானப்படை அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றது. தற்போது அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு யார் பொறுப்பு கூறுவது? வடமாகாணத்தில் பெற்றோர்கள் தாய்மார்கள் இரண்டாயிரம் நாட்களுக்கு அதிகமாக தங்களுடைய பிள்ளைகளுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  அதற்கு நீதி கூறுவது யார்? அதற்கு பொறுப்பானவர்கள் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்று இருக்கின்றார். அதற்கு உதவி செய்தது யார்?

மக்கள் வாழ முடியாத நிலை இருக்கின்றது. மக்களுக்கு எரிவாயு, மின்சாரம், பெற்றோல், டீசல் இல்லை. மாணவர்களுக்கு கல்வியில்லை. நாடே சீரழிந்து போயிருக்கிறது. இதற்கு பொறுப்பு கூறவேண்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து தப்பி சென்று இருக்கின்றார். அவர் நாட்டிலிருந்து தப்பி செல்வதற்கு உதவியவர்களுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும் ,இராணுவமாக இருந்தாலும் விமானப் படையாக இருந்தாலும் அரசியல்வாதிகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வெளியேற வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். அவர்கள் பதவி விலகாவிட்டால் நாளை (இன்று) முதல் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை ஹர்த்தால் செய்வோம். கடந்த கால போராட்டங்களில் ஹர்த்தால்கள், வேலைநிறுத்தங்கள் என பல போராட்டங்கள் இடம்பெற்றன. அந்த அனுபவத்தோடு நாங்கள் நாளைய தினம் (இன்று) முதல் எங்களுடைய செயற்பாடுகளை முன்கொண்டு செல்வோம் - என்றார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image