வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு , நிதி நெருக்கடி நிலைமை என்பவற்றுடன் வௌ்ளிக்கிழமைகளில் வீட்டுத்தோட்டங்களை செய்யவும் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார் என்று சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையடி வருவதாகவும், இதன்படி இறுதி முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வீடுகளில் பயிர் செய்களை ஊக்குவிக்க வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், வெள்ளிக்கிழமை விடுமுறையை அவர்கள் அதற்காக பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
காணிகள் மற்றும் வீட்டுத்தோட்டங்கள் செய்ய வசதியுள்ளவர்கள் கமத்தொழில் திணைக்களத்தில் பதிவு செய்து விட்டு வௌ்ளிக்கிழமைகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியும் என்றும் சிரேஷ்ட அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் கமத்தொழில் திணைக்களத்துடன் கலந்துரையாடி முன்மொழிவு விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இதனூடாக குறைந்த எண்ணிக்கையான ஊழியர்களுடன் அலுவலக சேவைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சில அரச சேவை ஊழியர்களுக்கு வௌ்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெய்லி மிரர்/ சண்டே டைம்ஸ்