அரச ஊழியர்களுக்கு இடைக்கால பட்ஜட்டில் சம்பள உயர்வு வழங்கப்படுமா ?
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுமா என்பது தொடர்பாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பில் கொள்கை வகுப்போர் தீர்மானிப்பர் எனவும் மூலதனச் செலவுகளை குறைத்து முடியுமான துறைகளுக்கு நிவாரணம் வழங்க முன்னுரிமை வழங்குவதாக பிரதமர் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் சம்பள உயர்வு வழங்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் சம்பளம் வழங்க வேண்டும். 2020 இல் மொத்த வரி வருமானத்தில் 86 வீதம் அரச ஊழியர்களின் சம்பளத்திற்கும் ஓய்வூதியத்திற்கும் செலவிடப்பட்டுள்ளது.
இதனால் பெற்ற கடனுக்கு வட்டி செலுத்துவதும் சமுர்த்தி கொடுப்பனவு வழங்குவதும் சிக்கலாகிறது.
அரச நிதி முகாமைத்துவச் சட்டம் உரிய வகையில் பின்பற்றப்படாததால் இந்த சிக்கல் ஏற்பட்டது. செலவுகளை குறைத்து மக்களை வாழ வைக்கும் விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.கொள்கை வகுப்போர் தொழில்நுட்ப ரீதியாக ஆராய்ந்து சம்பள விடயம் குறித்து முடிவு செய்வர்.
மூலதனச் செலவுகளை குறைத்து முடியுமான துறைகளுக்கு நிவாரணம் வழங்க முன்னுரிமை வழங்குவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
தினகரன்