மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நோக்கில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் (05) நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் ஆசிரியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கருப்பு உடை அணிந்து பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்த ஆசிரியர்கள், தங்களுடைய பாடசாலைகளுக்கு முன்னால் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு பாதுகாப்புக் கல்லூரி, மகாநாம கல்லூரி, ரோயல் கல்லூரி உட்பட மேலும் பல பாடசாலைகளுக்கு முன்பாக பெருமளவான ஆசிரியர்கள் கூடிநின்று எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு, மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கும் அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன் பொருளை சந்திக்கு பேரணியாக சென்ற பெருமளவான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்.
இதன்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அனைத்து மக்களினதும் அபிலாஷையாகும் என்றும், அதற்கு செவிசாய்த்து அரசாங்கம் உடனடியாக செல்லவேண்டும் என்றும் குறிப்பிட்டார். பொய்யான அமைச்சுப் பதவிகளை வழங்கி பொய்யான பதவி விலகல்கள் மூலம் சுயாதீனமாக செயற்படுவது பொருத்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்காக ஆசிரியர்கள் சங்கங்கள் முன்னிற்பதாகவும், அதற்காக போராடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கொழும்பு ஆனந்தா கல்லூரியின் ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்ப்பில் பங்கேற்றிருற்தமை விசேட அம்சமாகும். தற்போதைய ஜனாதிபதி கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.