அதிபர் ஆசிரியர் சம்பள உயர்வு சுற்றுநிருபம் தொடர்பில் ஜோசப் ஸ்டாலின்
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஜனவரி மாதத்தில் சம்பளம் அதிகரிக்கப்படாவிட்டால் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது.
சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் இதுவரை வெளியிடப்படவில்லையென இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்றுநிருபம் எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பள உயர்வை வலியுறுத்தி அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், மூன்ற மாதங்களாக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெத்திருந்தன. இந்த நிலையில், அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் இணங்கியுள்ளது.
அதிபர்கள், ஆசியர்களின் சம்பள முரண்பாடை தீர்பதற்காக, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 30,000 மில்லின் ரூபா ஒதுக்கீட்டுக்கான முன்மொழிவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வரவுசெலவுத் திட்ட உரையில் அறிவித்தார்.
ஆசிரியர் - அதிபர் சேவைகளின் சம்பள முரண்பாட்டினை நீக்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்து அரசாங்கத்தின் மூலம் கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2021.8.30 ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தினை விரைவாக செயற்படுத்துவதற்காக மேலும் ரூபா 30,000 மில்லியனை சம்பளமாக உட்சேர்ப்பதற்கு முன்மொழியப்படுகின்றது.
இது ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளம் தொடர்பாக தற்பொழுது செலவிடப்படுகின்ற ரூபா 109,000 மில்லியனுக்கு அதிக தொகையினைவிட மேலதிக ஒதுக்கீடாகும். – என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.