அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்காக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்தார்.
அது தொடர்பில் அண்மையில் கொரிய வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் அந்த நாட்டில் இலங்கையருக்கான தொழில்வாய்ப்பை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிட்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய லொத்தர் சபையின் ஏற்பாட்டில் லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகளை கையளிக்கும் வைபவம் வெளிவிவகார அமைச்சில் நேற்று முன்தினம் (22) நடைபெற்றது.
அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் ஜீ. எல் பீரிஸ் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
60 வருடங்களுக்குப் பின்னர் தேசிய லொத்தர் சபை சாதனையை நிலைநாட்டியுள்ளது. அரசாங்கத்தின் சார்பில் நாம் லொத்தர் சபைக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கொவிட்19 சூழ்நிலை காரணமாக நாடு மிகவும் நெருக்கடியை சந்தித்துள்ள காலகட்டம் இது. இத்தகைய சவாலான சூழ்நிலையில் ஆறு தசாப்தங்களுக்கு பின்னர் தேசிய லொத்தர் சபை பல கோடி ரூபாய்களை பரிசாகப் பெற்றுக் கொடுத்து இத்தகைய சாதனையை நிலைநாட்டியுள்ளது.
அத்துடன் காலத்துக்குப் பொருத்தமான, யுகத்துக்கு பொருத்தமான வகையில் புதிதாக சிந்தித்து புதிய செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு லொத்தர் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பிரதாய முறைமைகளுக்கு இன்னும் ஒருபடி மேல் சென்று கடதாசியில் அச்சிடப்படும் லொத்தர் சீட்டுக்கு மேலதிகமாக ஒன்லைன் மூலமான லொத்தர் சீட்டு விற்பனையை அறிமுகம் செய்கின்றமை வரவேற்கத்தக்கது.
அத்துடன் நாட்டில் டொலர் தட்டுப்பாடு நிலவும் இக்காலகட்டத்தில் டொலர் மூலமான லொத்தர் விற்பனையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை காலத்திற்குப் பொருத்தமான ஒரு செயற்பாடாகும்.
அதன் மூலம் அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் எமக்குக் கிட்டுகிறது. அதற்கு வெளிநாட்டமைச்சு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கும். அந்நிய செலாவணியில் நிலவும் சிக்கல்களை நிவர்த்தி செய்யும் வகையில் இது ஒரு புதிய முறையாக அறிமுகப்படுத்துவது பாராட்டத்தக்கது என்றார்.