தொழில் சட்டங்கள் பற்றிய அறிவூட்டலினால் வடக்கின் தொழிற்சங்கங்கள் ஸ்திரத்தன்மையில்
சொலிடேரிட்டி சென்டர் (Solidarity Center ) அமைப்பினால், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்குதொழில் சட்டம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் ZOOM தொழில்நுட்பம் ஊடாக மூன்று மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்திசெய்த தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (18) யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தனேஷ் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கே.மகேசன் ஆகியோர்இந்த நிகழ்வில் பயிலுனர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
இந்தப் பயிற்சி வேலைத்திட்டம் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 3 மாதகாலம் இடம்பெற்றது. இதில் 15 தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 45 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். அவர்களுக்கு நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசிரியர் ஏ.சர்வேஸ்வரனால் ஸும் தொழில்நுட்பம் ஊடாக இந்த பயிற்சி செயலமர்வு நடத்தப்பட்டது. இதன்போது தொழில் சட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கை, சம்பவக் கற்கை ஊடாக தொழில் சட்டங்களை செயன்முறை ரீதியாக செயற்படுத்தும் முறைமை மற்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் தொழில் சட்டங்கள் தொடர்பில் அறிந்திருத்தலின் முக்கியத்துவம் என்பன குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
இந்தப் பயிற்சி மூலம் தொழில் சட்டங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற அறிவு தொடர்பில் தாங்கள் திருப்தி அடைவதாகவும், அறிந்திராத பல சட்டங்கள் தொடர்பான அறிவு இதன் மூலம் கிடைத்தது என்றும் குறிப்பிட்டனர்.
அத்துடன் இதுபோன்ற பயிற்சி வேலைத்திட்டம் கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும், அதற்காக சொலிடேரிட்டி சென்டர் அமைப்புக்கும், தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கு நன்றி கூறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது மிகவும் பயனுடைய பயிற்சி வேலைத்திட்டம் என்றும், இதன்போது சம்பவக் கற்கைகள் ஊடாக சட்டதிட்டங்களை செயன்முறை ரீதியாக பிரயோகிக்கும் முறைமைதொழிற்சங்க நடவடிக்கையில் தொழில் சட்டங்களை செய்முறை ரீதியாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அறிவூட்டியமைக்காத பிரதான விரிவுரையாளர் சர்வேஸ்வரனுக்கும், சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த சொலிடேரிட்டி சென்டர் அமைப்புக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.