எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஊக்கி (Booster) தடுப்பூசி ஏற்றலை முழுமைப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விசேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இரண்டாவது செலுத்துகை தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு 03 மாதங்கள் நிறைவடைந்த அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதி பெறுவர்.
அதன்படி, தடுப்பூசி வழங்கப்படும் எந்தவோர் இடத்திலும் இன்று முதல், தினசரி பூஸ்டர் தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கேற்ப, இன்றைய நாட்களில் அடையாளம் காணப்படும் கொவிட் நோயாளிகளில் அதிக வீதமானவர்கள், எந்த தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களாக இருப்பதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதுடையவர்கள் என்று சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
கொவிட் தொற்றுக்கு ஆளாகுதல் மற்றும் மரண எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்வதற்காக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.
இது தொடர்பாக இளம் வயதினருக்கு தெளிவுபடுத்தி, விரைவாகத் தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளேன்.
கொவிட் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தடுப்பூசியைப் பெறாதவர்கள், பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக தற்போது சட்ட ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
அதைக் கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் பொது இடங்களுக்குச் செல்லும்போது தடுப்பூசி அட்டையைக் கொண்டு செல்வதைக் கட்டாயமாக்க கொவிட் குழு இன்று தீர்மானித்தது.
16 - 19 வயதுகளுக்கிடையிலான பிள்ளைகளுக்கு இரண்டாவது செலுத்துகை தடுப்பூசியையும், மற்றும் 12 - 15 வயதுடைய பிள்ளைகள் அனைவருக்கும் முதலாவது தடுப்பூசியை வழங்குவதற்கும் அனுமதி கிடைத்துள்ளது.
இதன்படி கல்வி அமைச்சுடன் இணைந்து திட்டமிட்டு, தடுப்பூசி ஏற்றலை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளேன்.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. விமான நிறுவனங்கள் விமானப் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.
எனவே, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளேன். – என்று தெரிவித்துள்ளார்.