வேதன முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக நிறைவுகாண் வைத்திய சேவை ஒன்றிணைந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, வடமேல் மாகாணத்தில், மத்திய மற்றும் மாகாண சபையின் கீழியங்கும் அனைத்து சுகாதார நிறுவனங்களின், அனைத்து தொழில் வல்லுநர்களும் இந்த பணிப்புறக்கணிப்பில் இணைவதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாணத்தின் இரசாயன பகுப்பாய்வக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தாதிய, நிறைவுகாண், வைத்திய மற்றும் இடைநிலை வைத்திய சுகாதார உத்தியோகத்தர்கள், குருநாகல் போதனா வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது பிரச்சினைகள் குறித்து தீர்வு வழங்காதமையால், இன்று சேவைக்கு சமுகமளிக்காது, தொடர் தொழிற்சங்க நட்வடிக்கையில் ஈடுபட உள்ளதாக நிறைவுகாண் வைத்திய சேவை ஒன்றிணைந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், நாளைய தினம் மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
இதற்கு தீர்வு வழங்காவிட்டால், நாடுதழுவிய ரீதியில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நடவடிக்கை எடுக்க உள்ளதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.