இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடனான நான்காயிரம் வீட்டுத்திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையடைவதுடன், இந்திய அரசாங்கத்தின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சபையில் தெரிவித்தார்.
2015-2019 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டு கைவிடப்பட்ட வேலைத்திட்டங்களை பூர்த்தி செய்ய 700 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளதாகவும் சபையில் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (6) இடம்பெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு, நகர அபிவிருத்தி கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு, கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ் நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு,விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கானரூnடிளி; நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தின் போது அமைச்சிற்கான அறிவிப்பை விடுத்த வேளையில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
தோட்ட வீடமைப்பு அமைச்சு மிக முக்கியமான அமைச்சாகும். பெருந்தோட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்தையும், வீடுகளையும் அமைத்துத்கொடுக்கும் அமைச்சாகும். இந்த அமைச்சு வெறுமனே எனது அமைச்சு அல்ல, எமது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சாகும்.
இந்த பயணத்தில் நாம் சகலரும் ஒன்றாக பயணிக்க வேண்டியுள்ளது. எனது அமைச்சின் கீழ் 977 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டிலும் நாம் வீட்டின் மதிப்பீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததுடன், ஏழு பேர்ச் காணியை 10 பேர்ச்களாக அதிகரித்தோம்.
குறித்த மூன்று பேர்ச் காணியில் சுய தொழில் உற்பத்தியை ஊக்குவிக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் 2015-2019 ஆம், ஆண்டில் முன்னெடுக்கப்பட்டு கைவிடப்பட்ட வேலைகளை பூர்த்தி செய்ய 700 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளோம்.
அதேபோல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை புனரமைக்க 200 மில்லியன் செலவு செய்யப்பட்டது. அதேபோல் ஏனைய அபிவிருத்தி, அத்தியாவசிய தேவை அபிவிருத்தி, பாடசாலை அபிவிருத்திக்கும் பிரத்தியேக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பெருந்தோட்ட மக்கள் வேலைக்கு செல்லும் வேளையில் அவர்களுக்கான மலசலகூட வசதிகள் இருக்கவில்லை, ஏனைய அடிப்படை வசதிகள் இல்லை, பணிபுரியும் தொழிலாளர்கள் வீதியில் இருந்து சாப்பிட வேண்டிய நிலையே இருந்தது. இன்று அவற்றை நாம் மாற்றியுள்ளோம். அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டது.
கொவிட் அச்சுறுத்தல் நிலைமையில் வைத்தியசாலைகளின் தேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அவசர சிகிச்சை பிரிவிகளை உருவாக்கினோம், தனிமைப்படுத்தல் முகாம்களை உருவாக்கி கொடுத்துள்ளோம். வறுமையில் உள்ள மக்களுக்கு நிவாரான பொருட்களை வழங்கியுள்ளோம்.
இந்நிலையில் இந்திய வீட்டுத்திட்டம் பாரிய பிரச்சினையாக உள்ளது, இந்த திட்டத்தின் கீழ் வெறுமனே 699 வீடுகள் மட்டுமே மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர், வீதி வசதிகள் இருப்பதே முழுமையான வீட்டுத்திட்டமாகும். வெறும் கட்டிடத்தை கட்டிவிட்டு வீட்டை கட்டிவிட்டோம் என் கூறுவது மிகப்பெரிய தவறாகும்.
ஆனால் இந்தியா தனது அமைப்புகளின் மூலமாக அண்ணளவாக 3300 வீடுகளை நிறைவு செய்துள்ளது. அதற்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் கடந்த ஒரு ஆண்டுக்குள் 1936 வீடுகளை அடிப்படை வசதிகளுடன் மக்களுக்கு ஒப்படைத்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் 2,064 வீடுகளையும் முழுமைப்படுத்திவிடுவோம். இந்த ஆண்டு இறுதிக்குள் நான்காயிரம் வீட்டுத்திட்டம் முழுமையடையும். இது எமது அரசாங்கத்தின் சாதனையாகும்.
அதேபோல் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தின் கீழ் எமக்கு கிடைக்கும் 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும்.
இவை மூன்று கட்டங்களில் ஒப்படைக்கப்படும், இதற்காக இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், 695 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
அதேபோல் அடுத்த ஆண்டில் எமக்கு உள்ள நிதி ஒதுக்கீட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறையை மேம்படுத்த பாரிய திட்டமிடல் ஒன்று இடம்பெறும். ஸ்மார்ட் வகுப்புகளை உருவாக்கவும், பாடசலை புனரமைப்பு, வைத்தியசாலை புனரமைப்பு, தரிசு நிலங்களை குத்தகை முறையில் இளைஞர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.
மூலம் - வீரகேசரி