மின்சாரத்துறை தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் துறைமுக, கனியவள தொழிற்சங்கங்கள்

மின்சாரத்துறை தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் துறைமுக, கனியவள தொழிற்சங்கங்கள்

இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், கனியவள கூட்டுத்தாபன மற்றும் துறைமுக தொழிற்சங்கங்கள் இன்று மதியம் 12 மணிக்கு போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளன.

மின்சாரத்துறை ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து, இலங்கை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டம், கொலன்னாவ பிரதான களஞ்சியம் மற்றும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் என்பனவற்றுக்கு முன்னாள் இன்று மதியம் இடம்பெறவுள்ளது.

 
இதன் காரணமாக, எரிபொருள் விநியோக நடவடிக்கையில் தாமதம் ஏற்படக்கூடும் என அந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை கனியவள தொழிற்சங்க சம்மேளகத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித, தொழிற்சங்க பலத்தை தாங்கள் பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
 
மக்களின் கருத்துக்கு அரசாங்கம் செவிசாய்க்காவிட்டால், மக்களதும், நாட்டினதும் இறைமையைப் பாதுகாக்க, விருப்பமின்றியேனும் நாட்டை முடக்குவதற்கு தாங்கள் பின்னிற்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேநேரம், துறைமுக தொழிற்சங்கம் ஏற்பாடு செய்துள்ள போராட்டம், கொழும்பு துறைமுக அதிகார சபைக்கு முன்னாள் உள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் இடம்பெறவுள்ளது.
 
அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் கொரகானகே இதனைத் தெரிவித்துள்ளார்.
 
13 ஏக்கர் பரப்பு துறைமுக காணியும், துறைமுக சேவை பிரிவுக்கு உரித்தான அனைத்து சேவைகளையும், சி.ஐ.சி.ரி நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முன்வைத்துள்ளது.
 
இந்தக் காரணத்தை மையப்படுத்தி, இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image