பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான 13 பேர்கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் நேற்று விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் வண்ணம் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணியில் 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
1. கலகொடஅத்தே ஞானசார தேரர்
2. பேராசிரியர் தயானந்த பண்டா
3. பேராசிரியர் ஷாந்திநந்தன விஜேசிங்க
4. பேராசிரியர் சுமேத சிறிவர்தன
5. N.P. சுஜீவ பண்டிதரத்ன
6. சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன
7. சட்டத்தரணி சஞ்சய மாரம்பே
8. எரந்த நவரத்ன
9. பானி வேவல
10. மொஹமட் மௌலவி
11. விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப்
12. கலீல் ரஹ்மான்
13. அசீஸ் நிசார்தீன் ஆகியோராவர்.
இலங்கையினுள் ஒரே நாடு, ஒNரு சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாக கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவு ஒன்றைத் தயாரித்தல் இந்த செயலணிக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கபபட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து, அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும், ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதலும் இந்த செயலணிக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக ஒப்படைக்கப்படும் பணிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையானவாறு, விடயங்களை விசாரிப்பதற்கும் ஆலோசனைகளை வழங்குவதற்கும் இந்த ஜனாதிபதி செயலணிக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணியின் உறுப்பினர்கள், குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒருமுறை ஜனாதிபதிக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கும், இறுதி அறிக்கையை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிப்பதற்கும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணியினால் ஆலோசனை வழங்கக்கூடிய அல்லது சேவைகளை வழங்குவதற்காக உதவியினைக் கோரக்கூடிய சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் ஏனைய நபர்களும் குறித்த செயற்பாடு தொடர்பில் அவற்றைப் பின்பற்றி அத்தகைய ஆலோசனைகளுக்கமைய செயற்பட வேண்டும்.
வழங்கக்கூடிய சகல உதவிகளையும் வழங்க வேண்டும் என்றும், வழங்கக்கூடிய அத்தகைய சகல தகவல்களை வழங்க வேண்டுமென்றும் சகல அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் ஏனைய நபர்களுக்கும் ஜனாதிபதியினால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
யாதேனும் அரச ஊழியர் அல்லது யாதேனும் அமைச்சின், அரச திணைக்களமொன்றின், அரச கூட்டுத்தாபனமொன்றின் அல்லது ஏனைய அவ்வாறான நிறுவனமொன்றின் உத்தியோகத்தர் ஒருவர், இந்த செயலணியினால் ஒப்படைக்கப்படும் கடமைகளை நிறைவேற்றத் தாமதிக்கும் அல்லது தவறும் சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் தம்மிடம் அறிக்கையிடுமாறு இந்த செயலணிக்கு ஜனாதிபதி கட்டளையிட்டுப் பணிப்புரை விடுப்பதாகவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.