ஆசிரியர் - அதிபர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்க ஜே.வி.பி முன்வைக்கும் யோசனை

ஆசிரியர் - அதிபர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்க ஜே.வி.பி முன்வைக்கும் யோசனை

அநாவசிய செலவுகளுக்காக அரசாங்கம் கடந்த 16 மாதங்களில் 1300 பில்லியன் நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு 64 பில்லியனை அரசாங்கத்தினால் ஒதுக்க முடியாதா? என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கேள்வியெழுப்பியுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலையை 1257 ரூபாவால் அதிகரித்துள்ள அரசாங்கம் அதிபர் - ஆசிரியர்களுக்கு 1250 ரூபாவால் மாதாந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கான யோசனையை முன்வைக்கின்றது.

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு பதிலாக மாணவர்களின் கல்வியை எண்ணி அரசாங்கம் முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியது.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று முன்தினம் (23) சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிபர் - ஆசிரியர்களால் நியாயமான கோரிக்கையை முன்வைத்தே போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனினும் அவர்களின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வை வழங்குவதில் அரசாங்கம் மந்த போக்குடன் செயற்படுகிறது.

சுபோதினி அறிக்கையின் பரிந்துரைகளில் மூன்றில் ஒரு பகுதியை முதற்கட்ட தீர்வாக பெற்றுக்கொள்ள அதிபர் - ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளபோதிலும், அரசாங்கம் அந்த மூன்றில் ஒன்றையும் இரண்டு பகுதிகளாகவே வழங்க முடியும் என்று கூறுகின்றது.

அவ்வாறு செய்வதன் மூலம் அதிபர் - ஆசிரியர்களுக்கு வெறும் 1250 ரூபா சம்பள அதிகரிப்பு மாத்திரமே கிடைக்கப் பெறும். ஆனால் சமையல் எரிவாயுவின் விலை 1257 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16 மாதங்களில் அரசாங்கத்தினால் 1300 பில்லியன் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. வாராந்தம் சுமார் 20 பில்லியன் நாணயத்தாள்களை அச்சிடும் அரசாங்கத்திற்கு ஏன் அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்க முடியாது? அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு 64 பில்லியன் மாத்திரமே செலவாகும். வருடாந்தம் அரசாங்கம் செலவிடும் 4500 பில்லியனில் 64 பில்லியனையே அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் கோருகின்றன. அநாவசிய செலவுகளைக் குறைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்காத அரசாங்கம் மாணவர்களின் கல்வியை எண்ணி முதலைக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது - என்றார்.

மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image