சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கை

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கை
சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கமும் சுகாதார அமைச்சும் இதுவரையில் கவனம் செலுத்தாமை காரணமாக இன்றைய தினம் (27) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
சுகாதாரத்துறை தொழிற்சங்க ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை ஐந்து மணிநேரம்  சேவையில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன், மதியம் 12 மணிக்கு பின்னர் நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில்  போராட்ட நடவடிக்கையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த தொழிற்சங்க நடவடிக்கையில், தாதியர் சேவை, நிறைவுகாண் தொழில் வல்லுநர் சேவை,  இடைநிலை மருத்துவ சேவை எழுதுவினைஞர் சேவைகள்,  சிற்றூழியர்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
முதற்கட்டமாக கடந்த 22ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்ட 7500 ரூபா கொடுப்பனவு அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டமை இதற்கு பிரதான காரணமாகும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
சுகாதாரத் துறைசார் 12 ஊழியர்கள் இதுவரையில் கொவிட்-19 நோயினால் மரணித்துள்ளனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு கிடைக்கப் பெறவேண்டிய கொடுப்பனவை மீண்டும் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரத்துறை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image