மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு கல்வி பொதுத் தாரதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப பத்திரங்களை மாத்திரம் அனுப்பி வைப்பதற்கு அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் அனுப்பி நிறைவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொட்டுவ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப பத்திரங்களை அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேதன முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ஆசிரியர் அதிபர் சங்கங்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று 71வது தினமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், உயர்தர பரீட்சை மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான காலம் கடந்த 15ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது.
இந்த முறை கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 49 ஆயிரத்து 841 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அத்துடன், 5ஆம் தரப்புலமைப் பரிசில் பரீட்சைக்கு 2 இலட்சத்து 43 ஆயிரத்து 704 பேரும் விண்ணப்பித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து ஆயிரத்து 471 பேரும், 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்காக 3 இலட்சத்து 31 ஆயிரத்து 740 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
மூலம் - சூரியன் செய்திகள்