பாரியளவிலான வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்காக தனியார்துறை முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் காணி வழங்கல் தொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த ஆறாம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் வருமாறு,
இலங்கையின் திரவப்பால் தேவையின் 40 சதவீதமானவை உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுவதுடன், ஏனையவற்றை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் 50 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. அதனால், பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான யோசனைகள் இலங்கை முதலீட்டு சபையால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை முதலீட்டுச் சபை, ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்களின் யோசனைகளைக் கோரியுள்ளதுடன், குறித்த சபையின் தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கருத்திட்ட யோசனைகளை சமர்ப்பித்தவர்களுக்கு தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணைகளில் தற்போது பயன்படுத்தாத காணிகள் மற்றும் பயன்பாட்டுக்கு உட்படுத்தாத ஏனைய அரச காணிகளை நவீன பால் பண்ணைகளாக அபிவிருத்தி செய்வதற்காக கீழ்க்குறிப்பிட்ட வகையில் 30 வருடங்கள் நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
H.B.K.I.R International Investment/ Access Agro (Pvt) Ltd நிறுவனத்திற்கு 700 ஏக்கர்கள் மற்றும் Pesara Logistics நிறுவனத்திற்கு 60 ஏக்கர்களும் தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான நிக்கவெரட்டிய பகுதியில் அமைந்துள்ள பண்ணையில் ஒதுக்கி வழங்கல்.
அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான கலபொடவத்த பெருந்தோட்டம் மற்றும் மவுன்ட் ஜின் தோட்டங்களில் 811 ஏக்கர்கள் Farm’s Pride (Pvt) Ltd நிறுவனத்திற்கு ஒதுக்கி வழங்கல்
அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான தெல்தொட்ட பெருந்தோட்டம் மற்றும் க்றேவ் வெலி தோட்டங்களில் முறையே, 200 ஏக்கர்கள் மற்றும் 150 ஏக்கர்களை Hillside Agro (Pvt) Ltd நிறுவனத்திற்கு ஒதுக்கி வழங்கல்
தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான கொட்டுக்கச்சிய பண்ணையில் 250 ஏக்கர்களை Gamma Pizzakraft (Pvt) Ltd நிறுவனத்திற்கு ஒதுக்கி வழங்கல்