உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க பரிந்துரை
உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அசாதாரண அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என உள்ளாட்சி தேர்தல் முறைமை தொடர்பான மீளாய்வு குழு பாராளுமன்ற விஷேட குழுவில் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய மீளாய்வுக் குழுவின் அறிக்கை தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் 02 ஆம் திகதி பிற்பகல் கலந்துரையாடப்பட்டது.
மீளாய்வுக் குழுவின் சாராம்சத்தை அதன் தலைவராக செயற்பட்ட காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க முன்வைத்தார்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண அதிகரிப்பு தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் தீர்மானிக்கப்பட்டது போன்று, நிலையான அளவொன்றுக்கு குறைக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே பாராளுமன்ற விஷேட குழுவில் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 70 வீதமானவை தொகுதி அடிப்படையிலும் ஏனைய 30 வீதமானவை விகிதாசார அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பு செய்யும்போது பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையை பயன்படுத்துவது பொருத்தமானது என மீளாய்வுக் குழு பரிந்துரைப்பதாக தெரிவித்த சுதந்த லியனகே, இதில் காணப்படும் போனஸ் ஆசன முறையும் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
வெற்றி பெறும் கட்சிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படாமை தற்பொழுது காணப்படும் கலப்பு விகிதாசார தேர்தல் முறையில் உள்ள குறைபாடாக மீளாய்வுக் குழுவின் அவதானிப்பாக இருந்தது. இதனால் உள்ளூராட்சி மன்றங்களில் உருவாகியுள்ள நிலையற்ற தன்மையை, போனஸ் ஆசனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் குறைத்துக் கொள்ள முடியும் என குழுவின் நம்பிக்கையாகும் எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.
எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேட்சைக் குழுவோ உள்ளூராட்சி மன்றங்களில் பிரதிநிதித்துவத்திற்கு தகுதியுடையவர்களாக இருக்க, அந்த கட்சி அல்லது சுயேசட்சைக் குழு சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி அதிகார எல்லைக்குள் வழங்கப்பட்டுள்ள செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கையில் 2.5 வீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் மீளாய்வுக் குழு உறுப்பினர்கள் பாராளுமன்ற விசேட குழுவின் முன்னிலையில் தெரிவித்தனர்.
பல் உறுப்பினர் தொகுதிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்ற வேண்டும் எனவும், 2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சட்டத்தில் காணப்படும் முறை அதற்காக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் மீளாய்வுக்குழு பாராளுமன்ற விசேட குழுவில் சுட்டிக்காட்டியது. அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜயலத் ரவி திசாநாயக்கவும் இந்த மீளாய்வு குழுவின் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட வகையில் உள்ளூராட்சி மன்றங்களை நடாத்துவதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது என இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர், சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். எனினும் தொகுதிக்கு பொறுப்புக்கூறும் உறுப்பினர் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2017 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க மாகாணசபை தேர்தல் (திருத்த) சட்டம் தொடர்பான சட்ட மா அதிபரின் தீர்மானமும் இதன்போது விஷேட குழுவில் முன்வைக்கப்பட்டது.
அதேபோன்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவில் சமர்ப்பித்திருந்த “உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான அவதானிப்புக்களை உள்ளடக்கிய அறிக்கை” இதன்போது குழுவில் முன்வைக்கப்பட்டது.
அமைச்சர்களான நிமல் சிரிபால டி சில்வா, ஜீ.எல் பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, எம்.யூ.எம் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், ரஞ்சித் மத்துமபண்டார, மனோ கணேசன், எம்.ஏ. சுமந்திரன், மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் இந்த குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
பாராளுமன்ற விஷேட குழுவின் அடுத்த அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை (06) இடம்பெறும் என பாராளுமன்ற பணியாட்டொகுதியின் தலைவரும் பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.