அரச மற்றும் தனியார் துறையில் ஊழியர்களை பணிக்கு அழைக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டம் முழுமையாக தடை செய்யப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எவ்வாறிருப்பினும், சுகாதாரம், துறைமுகம், விமான நிலையம் உட்பட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள், விவசாயத்துறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் முதலீட்டு சபையினால் அனுமதி வழங்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கு மாத்திரம், மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் துறையில் பணிக்குழாமினரை சேவைக்கு அழைக்கும்போது, அவசியத்தன்மை கருதி, குறித்த மாகாணத்திற்கு வெளியே வசிக்கும் ஊழியர்களை அழைப்பதற்கான அதிகாரம் நிறுவனப் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தனியார் வரத்தக நிலையங்களில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, பணியிடத்தின் இடப்பரப்பை கவனத்திற்கொண்டு, பணிக்குழாமினரை சேவைக்கு அழைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.