ஆட்கடத்தல் குறித்து முறையிடாதமையால் ஏற்படும் பாதிப்பை நீங்கள் அறிவீர்களா?
ஆட்கடத்தலுக்கு உட்படுகின்றவர்கள் பெரும்பாலானவர்கள் தங்களது முறைப்பாடுகளை முறையிடுவதற்கு முன்வராத காரணங்களினால் மனித ஆட்கடத்தல் தொழிலானது விரைவாக வளர்ந்து வருகின்ற ஒரு துறையாக காணப்படுகின்றது
என SWOAD அமைப்பின் நிகழ்வு முகாமையாளர் கே.பிறேமலதன் தெரிவித்துள்ளார்.
ஜுலை 30 ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை முன்னிட்டு வெளியிட்டு அறிக்கையில் அவர் மேற்கண்;டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனித ஆட்கடத்தல் என்பது இன்றைய கால கட்டத்தில் நவீன அடிமைத்தனம் மற்றும் கட்டாய உழைப்பு என்ற நிலையில் வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் என்ற அடிப்படையில் உலகலாவிய ரீதியில் நிகழும் நிகழ்வாகும். மில்லியன் கணக்கான மக்கள் கடத்தக்காரர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு தவறாக வழிநடாத்தப்பட்டு ஏமாற்றப்படுகின்றார்கள். குறிப்பாக இலகுவில் பாதிக்கப்படக்கூடிய மக்களை அடையாளம் கண்டு ஆண், பெண், பிள்ளைகள் என பாகுபாடுகள் இன்றி கடத்தி விற்கின்ற நிலை காணப்படுகின்றது.
இந்த சூழ்நிலையில் அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கௌரவத்தையும், உரிமைகளையும் இழக்கின்றனர். நபர்களைக் கடத்துவது என்பது உலகலாளவிய ரீதியில் வணிகமாக மாறுபட்டு வருகின்றது. இது இலாபத்தின் அடிப்படையில் போதைவஸ்துக் கடத்தல் தொழிலுக்கு இணையாக காணப்படுகின்றது.
இலங்கையைப் பொருத்தவரை மனித ஆட்கடத்தல் அதிகரித்துவருகின்ற ஒரு தொழிலாக மாறிவருகின்ற நிலை காணப்படுகின்றது. குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் மற்றும் இலகுவில் பாதிப்படையக்கூடிய நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மனித ஆட்கடத்தலுக்கு பலியாகின்றனர்.
பெரும்பாலும் இலங்கைச்சேர்தவர்கள் கடந்த பல வருடங்களாக உள்ளாட்டிலும், வெளிநாடுகளிலும் மனித ஆட்கடத்தலுக்கு உட்பட்டு வருகின்றனர். இதன்படி ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றவர்கள், உள்நாட்டில் வீட்டுப்பணிப் பெண்களாக வேலை செய்கின்றவர்கள், வியாபார தாபங்களில் பணிபுரிகின்றவர்கள், வெளிநாடுகளில் பணிபுரிகின்றவர்கள் மற்றும் நுண்கடன் நிதி பெற்று மீளச் செலுத்த முடியாமல் இருக்கின்ற குடும்பங்கள் என பல்தரப்பட்டவர்கள் கட்டாய உழைப்பு, பாலியல் அடிமைத்தனம், பிறருக்கு வணிக ரீதியான பாலியல் சுரண்டல் என இந்த மனித ஆட்கடத்தலுக்கு உட்படுகின்ற சம்பவங்கள் இலைமறைகாயாக தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இவ்வாறு மனித ஆட்கடத்தலுக்கு உட்படுகின்றவர்கள் பெரும்பாலானவர்கள் தங்களது முறைப்பாடுகளை முறையிடுவதற்கு முன்வராத காரணங்களினால் மனித ஆட்கடத்தல் தொழிலானது விரைவாக வளர்ந்து வருகின்ற ஒரு துறையாக காணப்படுகின்றது. மேலும் முறைப்பாடுகளை முறையிடுவதற்கு முன்வராததற்கு பல காரணங்கள் காணப்படுகின்றது.
1. பொதுமக்களிடையே மனித ஆட்கடத்தல் தொடர்;பான விழிப்புணர்வு இன்மை.
2. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முறைப்பாடு செய்வதனால் எவ்வித நிவாரண உதவிகள் கிடைப்பதற்கான பொறிமுறைகள் இன்மை.
3. பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பாக அடிக்கடி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாக அடிக்கடி அவர்கள் தொடர்பாக காட்சிப்படுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் உளரீதியாக பாதிக்கப்படுகின்றமை.
4. முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கிடைப்பதில் காலதாமதங்கள் ஏற்படல்.
5. முறைப்பாடுகளை நீதி மன்றங்களின் ஊடாக கொண்டு செல்வதற்குத் தேவையான நிதி வசதிகள் இன்மை
எனவே மேற்கூறப்பட்ட காரணங்களினாலேயே இலங்கைளில் மனித ஆட்கடத்தலுக்கு உட்பட்ட நபர்கள் முறைப்பாடுகளை செய்வதற்கு முன்வருவதில்லை என்பதனை அறியக்கூடியதாக உள்ளது.
ஆகவே எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம், சிவில் அமைப்புக்கள் போன்றோர்கள் இணைந்து மனித ஆட்கடத்தலை இலங்கையிலிருந்து ஒழிப்பதற்கு முன்வந்து ஒன்றிணைந்து பொருத்தமான பொறிமுறைகளை உருவாக்கி அதனை கிராமம், பிரதேசம், மாவட்டம், தேசிய ரீதியில் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்வரவேண்டும். - எனத் தெரிவித்துள்ளார்.