பணிப்பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இ்ன்று (23) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் 20 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் குறித்த 16 வயது சிறுமி இந்த வீட்டில் வேலைக்கு வருவதற்கு முன்னதாக மேலும் இரண்டு பெண்கள் அங்கு வேலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தரகர் ஒருவரினால் குறித்த இரண்டு பெண்களும் அந்த வீட்டிற்கு வேலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் தற்போது 32 வயது உடையவராகவும், மற்றொருவர் 22 வயது உடையவரும் ஆவார்.
தொடர்புடைய செய்தி ரிசாத் பதியுதீனின் மனைவி மற்றும் மனையிவின் தந்தை உட்பட மூவர் கைது
டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்தபோது, அவர் 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையில் முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிப்பெண்ணாக தொழில் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர் அந்த வீட்டில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நபர் ஒருவரினால் இரண்டு தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவியின் சகோதரரான மதவாச்சி பகுதியை சேர்ந்த 44 வயது உடையவர் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கமைய முன்னாள் அமைச்சரின் மனைவியின் சகோதரரான சந்தேகநபர் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலும் தொடர்ச்சியாக மேலதிக விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.