பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவித்தல்

பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவித்தல்

'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைத் திட்டத்தின் மற்றுமோர் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் முதலாவது பல்கலைக்கழகம், கேகாலை மாவட்டத்திலுள்ள பின்னவல பகுதியை மையமாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. அடுத்த சில வாரங்களில், அதற்கான பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டத்தை ஓர் எண்ணக்கருவாக அறிமுகப்படுத்தும் வகையில், அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.cu.ac.lk  '2021 - உலக இளைஞர் திறன் தினம்' கொண்டாடப்படும் தினத்தில் (15), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புதிய தொழில்நுட்பத்தின் மூலம், தொழில் சந்தையை இலக்காகக் கொண்டட திறமையான பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கத்துடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், பெருநகரப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறுகின்றவர்களில் 80 சதவீதமானவர்கள், பல்கலைக்கழக வாய்ப்பை இழக்கின்றனர். அவர்களில், பொருளாதார ரீதியாக வசதியுள்ள மாணவர்கள், தனியார் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் செல்கிறார்கள். உயர்தரத்தில் சித்தி பெற்றும், ஆனால் பொருளாதார ரீதியாக வசதியில்லாத திறமையான மாணவர்களுக்கு, தொழில் சந்தைக்கு ஏற்ற பட்டப்படிப்பினை வழங்குவதையே, இந்தப் பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டத்தின் மூலம் ஜனாதிபதி எதிர்பார்க்கிறார்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்துவமான, உள்நாட்டு மற்றும் உலகளாவிய தொழில் சந்தைக்குப் பொருத்தமான பாடத்திட்டத்தின் அடிப்படையில் பட்டப்படிப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும். பட்டப்படிப்பின் நிறைவில், அறிவு மற்றும் தொழிற்றிறன் நிறைந்த எதிர்காலப் பிரஜைகள் உருவாக்கப்படுவார்கள் என்று, திறன் விருத்தி, தொழிற்கல்வி மற்றும் புத்தாக்கத்துறை இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.

இளைஞர்களின் வேலைவாய்ப்பு இன்மையானது, 2014இல் 4 சதவீதமாகக் குறைவடைந்த போதும், 2019ஆம் ஆண்டில் அது, 16 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தற்போதைய உலகளாவிய நிலைமை காரணமாக, இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை 30 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என்றும் பட்டப்படிப்பின் மூலம் திறமையான இளைஞர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இளைய தலைமுறையினர், புதிய தொழில்நுட்பத்துடன் நவீனத்துவத்தை நோக்கி பயணிக்கின்றனர். இதன்போது, உலகுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக்கொள்வது முக்கியம் என்றும் இறுதியில் வெற்றிகொள்ள வேண்டியது வாழ்க்கையையே அன்றி, தொடர்ச்சியாகக் கொண்டுவரும் பழக்கங்களை அல்ல என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு பட்டதாரியின் எதிர்பார்ப்பு, ஒரு நல்ல தொழில் என்ற போதிலும், எந்தவொரு தொழிலுக்கும் பொருத்தமற்றதாக உள்ள சில பட்டப்படிப்புகளை சரி செய்வது காலத்தின் தேவையாகும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எடுத்துரைத்தார்.

'பட்டமொன்றைப் பெற்றுக்கொள்ளும் பல பட்டதாரிகள், அரச தொழிலை எதிர்பார்க்கிறார்கள். எனினும், அரசாங்கத்தின் பொறுப்பானது, தொழில்களை வழங்குவதல்ல. மாறாகத் தொழில்களை உருவாக்கும் ஒரு விரிவான பொருளாதாரச் சூழலை உருவாக்குவதேயாகும்' என்று, ஜனாதிபதி தெரிவித்தார்.

'பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டத்தின் மூலம், பொருளாதாரத்தில் நேரடியாகத் தொடர்புபடக்கூடிய அல்லது சுய தொழிலில் ஈடுபடக்கூடிய அறிவுள்ள ஒரு நபரை, பட்டப்படிப்பின் முடிவில் உருவாக்குவதே எனது எதிர்பார்ப்பாகும்' என்றும் ஜனாதிபதி கூறினார்.

இதையும் வாசியுங்கள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்

'நூற்றுக்கு நூறு சதவீதம் அரச பல்கலைக்கழகங்களை நடத்த முடியாது. இருப்பினும், தனியார்ப் பல்கலைக்கழகங்களை ஒரு வியாபாரமாக நடத்துவதைத் தான் எதிர்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

'தனியார்ப் பல்கலைக்கழகங்கள் ஈட்டும் வருமானத்தை, கல்வி நடவடிக்கைகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்க வேண்டும். கல்விச் சீர்த்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள், தற்காலத்துக்குப் பொருத்தமான ஒரு கல்வி முறையை முன்வைக்க வேண்டுமே அன்றி, அரசியல் நோக்கங்களை ஆதரிக்கின்றவர்களாக இருக்கக்கூடாது' என்றும் ஜனாதிபதி கூறினார்.

கேகாலையில் ஆரம்பமாகும் பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டத்தை, விரைவில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, அமைச்சின் செயலாளர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image