நுவரெலியா விவசாயிகள் உரம் கோரி போராட்டம்

நுவரெலியா விவசாயிகள் உரம் கோரி போராட்டம்

இரசாயன உர தட்டுப்பாடு தொடர்பாக நுவரெலியா விவசாயிகள் இன்று (05) காலை நுவரெலியா பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள புதிய சந்தைக் கட்டிடத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக நுவரெலியா நகரின் மத்தியில் அமைந்துள்ள கவிதாஸ் திடலிற்கு முன்பாக கூடி நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா நகர வர்த்தகர்களும் தங்களுடைய வியாபார நிலையங்களை ஒரு மணித்தியாலத்திற்கு மூடி தங்களுடைய ஒத்துழைப்பை வழங்கினர்.

மேலும் விவசாயிகளும் மரக்கறி வியாபாரிகளும் இணைந்து தட்டுப்பாடு இல்லாமல் இரசாயன உரத்தை பெற்றுக் கொடுக்குமாறு பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நுவரெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். போராட்டம் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது.

Photo_2.jpg

இந்த போராட்டம் தொடர்பாக தொடர்ந்து விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,

இன்று இலங்கையில் இரசாயன உர தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் நாடு முழுவதும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். விவசாயத்தை மாத்திரமே நம்பியிருக்கின்ற இந்த விவசாயிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.

தங்களுடைய முழுமையான வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் விவசாயிகள் செய்வதறியாத திகைத்துப் போயிருக்கின்றார்கள். ஆனால் அரசாங்கம் அவர்களை கண்டு கொள்வதாக இல்லை.

நுவரெலியாவில் விவசாயம் பாதிக்கப்பட்டால் இதனை நம்பியிருக்கின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

நாங்கள் ஒரு போதும் சேதன பசளைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதனை நடைமுறைபடுத்திய விதம் பிழையானது என்பதே எங்களுடைய கருத்தாகும். எதனையும் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும்.

சரியான திட்டமிடல் இல்லாமல் இந்த திட்டத்தை அரசாங்கம் நடைமுறைபடுத்துவதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்றைய இந்த கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரம் முழுமையாக முடங்கிப்போயிருக்கின்ற இந்த நிலையில் இவ்வாறான புதிய நடைமுறைகள் ஏற்புடையதல்ல.

சீன நாட்டின் கழிவுகளை இலங்கைக்கு கொண்டு வந்து அதனை சேதன பசளை எனக்கூறி விவசாயிகளுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும். எனவே விவசாயிகளை இல்லாமல் செய்து இலங்கை நாட்டை சீனாவின் காலனியாக மாற்றுவதே அரசாங்கத்தின் இந்த திட்டமிடப்பட்ட சதியாகும் என விவசாயிகள் குற்றம் சுமத்தினர்.

இதற்கு விவசாயிகள் ஒரு போதும் ஒத்துழைக்க மாட்டார்கள். எனவே இந்த திட்டத்தை அரசாங்கம் கைவிட்டு அதனை சரியான திட்டமிடலுடன் நடைமுறைபடுத்தினால் மாத்திரமே இதனை வெற்றிகரமாக செயற்படுத்த முடியும். – என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image