ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பில் ஆட்சேர்க்கப்பட்டோருக்கான அறிவித்தல்
கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விளக்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் காலப்பகுதியில் தொழிற்சாலைகளை தொடர்ச்சியாக நடத்திச் செல்லுதல், மருந்தகங்களை திறந்து வைத்தல், பேக்கரி உற்பத்திகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுதல் மற்றும் விநியோகிப்பதற்கு முறைமையொன்றை வகுத்தல், கப்பல் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களை திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பிரதேச ரீதியாக நடமாடும் சேவைகளை மேற்கொண்டு எவ்வித தட்டுப்பாடும் இன்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகிப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டுக்கு சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ள அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை சதொச நிறுவனத்திற்கு வழங்குவதற்கும், நாடளாவிய ரீதியில் உள்ள சதொச களஞ்சிய சாலைகளில் மேற்கொள்ளப்படும் பொருள் பொதியிடல் வேலைகளுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை பயன்படுத்துவதற்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக பிரதேச செயலாளர்களின் ஊடாக தேவையான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கும், வீதித் தடை நடவடிக்கைகளை இளகுபடுத்துவதற்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.