தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியாருக்கும் அனுமதிக்க கோரிக்கை
இலங்கைக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை கொண்டுவருவதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் அதிகமான கொவிட் நோயாளர்கள், கைத்தொழிற்சாலைகளிலும், ஏனைய தொழில்புரியும் இடங்களிலும் பதிவாகின்றனர்குறிப்பாக, ஆடைத்தொழிற்சாலை உள்ளிட்ட கைத்தொழில்சாலைகளில் இந்த நிலைமை உள்ளது. எனவே, தடுப்பூசி வழங்ககும் நடவடிக்கையில், ஆடைத் தொழிற்சாலை உள்ளிட்ட ஏனைய அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும்.
அந்த அவசியத் தன்மையை நிறைவேற்றுவதற்கு, அரசாங்கத்திற்கு தற்போது போதுமான வசதிகள் இல்லாவிட்டால், தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்காக தனியார்துறைக்கு அனுமதி வழங்கலாம்.
தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியின்கீழ், சுகாதாரத்துறையினால் தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் முறைமையின் அடிப்படையில், இலங்கைக்குள் தனியார்துறைக்கு தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்கு அனுமதியளிப்பதில் பிரச்சினை ஏற்படாது
கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, இலங்கையில் தடுப்பூசி செலுத்தலை அதிகரிப்பதற்கு, இவ்வாறான வழிமுறைகளை எதிர்காலத்தில் பயன்படுத்த வேண்டி ஏற்படும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கூறியுள்ளார்.