கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகும் பொது சுகாதார பரிசோதகர்கள்
இன்று முதல் அமுலாகும் வகையில், கம்பஹா மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகுவதற்கு கம்பஹா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
தடுப்பூசி வழங்குவதற்கான மத்திய நிலையங்களின் எண்ணிக்கையை இன்று முதல் குறைப்பதற்கு சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அந்த சங்கத்தின் தலைவர் சமிந்த சமரதிவாகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
முதல்முறை 30 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் இரண்டாவது சந்தர்ப்பத்தில் சில சில தீர்மானங்களின்படி, 60 வயதிற்கு மேற்பட்ட தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நேற்று முன்தினம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துமாறு சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த வேலைத்திட்டம் சீர்குலைகின்றது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில், 200 முதல் 225 மத்திய நிலையங்களின் மூலமாக கிராம சேவகர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவிருந்த வேலைத்திட்டம், சுகாதார அமைச்சின் தவறான தீர்மானத்தின் காரணமாக, 70 முதல் 80 மத்திய நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த வேலைத்திட்டத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டுசென்று, தலைவர்களுக்கு அறியப்படுத்தி, அரச அதிகாரிகளை தெளிவுபடுத்தி, இடங்களை தெரிவுசெய்து அனைத்து நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டிந்தன.
எனினும், மத்திய நிலையங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையினால், அவர்களுக்கு பதிலளிக்க முடியாத நிலை பொது சுகாதார பரிசோதகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று காலை முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து இன்று முதல் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கும், பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் கம்பஹா மாவட்ட கிளைக்கும் முன்னதாக எழுத்துமூலம் அறியப்படுத்தப்பட்டபோதும், அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இதற்கான உரிய முறைமை தொடர்பில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியிடமிருந்து எழுத்துமூலமான உறுதிப்படுத்தலை தாங்கள் எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.