கூட்டு ஒப்பந்தம் இரத்தாகுமா? அடுத்தக்கட்டம் என்ன? அனைவரும் அறியவேண்டியது

கூட்டு ஒப்பந்தம் இரத்தாகுமா? அடுத்தக்கட்டம் என்ன? அனைவரும் அறியவேண்டியது

'சம்பள நிர்ணய சபையின் மூலம் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதனால், கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள சரத்து இரத்தாகுமேதவிர, கூட்டு ஒப்பந்தம் இரத்தாகாது. இந்த விடயத்தை உரிய முறையில் அணுகினால், கம்பனிகளால் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முடியாது. ஆனால், தொழிற்சங்கங்களுக்கு இது தொடர்பில் போதிய அறிவு – தெளிவு இருக்கின்றா? என்பதே கேள்வியாகும்.'

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியரும், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான சங்கரன் விஜயசந்திரன், எமது இணையதளத்திற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி - சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாளாந்த சம்பளம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், வேலை நாட்களை 13 நாட்களாக குறைத்தல் உள்ளிட்ட சில நிபந்தனைகளை கம்பனிகள் முன்வைத்துள்ளன. எனவே, இந்த சம்பள உயர்வு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சாதகமானதா? பாதகமானதா?

பதில் - முதலாளிமார் சம்மேளனம் 700 ரூபாய் என்ற அடிப்படை சம்பளம் வழங்கும் நிலைப்பாட்டில் இருந்தபோது தற்போது 900 ரூபாய் என்ற அடிப்படை சம்பளம் கிடைத்திருப்பதால் அது ஓரளவுக்கு நல்லதொரு விடயமாகும்.  வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அனைத்து தரப்பின் அனைவருக்கும் 100 ரூபாய் கிடைக்கும்.  இதிலே 900 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கு மாத்திரமே ஈபிஎப் ஈடிஎஃப் கொடுப்பனவுகள் கிடைக்கும். 100 ரூபாய்க்கு அந்த கொடுப்பனவுகள் கிடைக்காது.  இது ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும். தொழிலாளி ஒருவர் ஒரு நாள் வேலைக்கு சென்றாலும்; அவருக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும்.

ஆனால், மறு பக்கத்தில் இருக்கின்ற பிரச்சினை என்னவெனில், நீங்கள் கூறியதுபோல கம்பனிகள் சில நிபந்தனைகளை முன்வைத்திருக்கின்றன.  அதாவது 1,000 ரூபாய் சம்பளம் வழங்க முடியும் ஆனால் 13 நாட்கள்தான் வேலை வழங்குவோம் என்று கூறியிருக்கின்றன.  ஆனால் அந்த நிபந்தனைக்கு கம்பனிகளால் வரமுடியாது.  ஏனெனில் சம்பள நிர்ணய சபைக்கு சென்றால், கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள ஒப்பந்தம் இரத்தாகுமேதவிர கூட்டு ஒப்பந்தம் இரத்தாகாது. தாய் கூட்டு ஒப்பந்தம் 1998ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. இதையடுத்து 2003ஆம் ஆண்டு அந்த ஒப்பந்த புதுப்பிக்கப்பட்டது.

இந்த 2003ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்த புதுப்பிக்கப்பட வேண்டும் என்று இணக்கப்பட்டது. அவ்வாறு இல்லாவிட்டால் 2003ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி 2003ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தான் கடந்த 17 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கின்றது.  குறிப்பாக 2003ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய, ஒருவர் உயிரிழந்தால் சவப்பெட்டியை கொள்வனவு செய்வதற்கு 2,000 ரூபா வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த 2,000 ரூபா தொகைதான் தற்போதும் வழங்கப்படுகின்றது.  அதேநேரத்தில் வருடாந்த போனசாக குறிப்பிடப்பட்ட 850 ரூபாய் தான் தற்போதும் கொடுக்கப்படுகின்றது.  இதன் காரணமாகவே இன்று தற்போது 4,335 ரூபாவாக வரவேண்டிய வருடாந்த போனஸ் இன்னும் 850 ரூபாவாக கொடுக்கப்படுகின்றது.  2003ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கின்ற காரணத்தினால் தான் இந்த தொகை வழங்கப்படுகின்றது.  

அந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் இருக்கின்ற மற்றுமொரு சரத்துதான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதாகும்.  கூட்டு ஒப்பந்தத்தின் ஒரு உப ஒப்பந்தம்தான் சம்பள ஒப்பந்தம் ஆகும். சம்பள விடயத்திற்கு அப்பால் தொழிலாளர் நலன்புரி விடயங்கள், தொழில் உறவுகள் தொடர்பான விடயங்கள் மற்றும் அவர்களுக்கு விடுமுறைகள், தொழில் பாதுகாப்பு என பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் சம்பளம் என்ற ஒரு சரத்து மட்டுமே இங்கே நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.  இந்த நிலையில் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள ஏனைய விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு ஏற்படும்.  எனவே, கம்பனிகள் கூறுவது போன்று  இதிலிருந்து சட்டரீதியாக வெளியேறி முடியாது என்பதே எமது முடிவாகும்.   அவ்வாறு அவர்கள் வெளியேறாமல் இருப்பதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டியது தொழிற்சங்கங்களின் பொறுப்பாகும்.  

2003ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தை நாடி  இது தொடர்பில் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால் சம்பளப் பிரச்சினையை சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்த்துக் கொள்வோம் என்று செல்வதுடன், ஏனைய தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கோ அல்லது தீர்வு காண்பதற்கோ புதிய பொறிமுறையை ஒன்றை உருவாக்க வேண்டும்.

இதன்படி தொழில் திணைக்கள ஆணையாளரின் கீழ் ஒரு நிரந்தரமான குழுவை நியமிக்க முடியும். அதாவது பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழில் உரிமைக்கான குழுவை உருவாக்க வேண்டும்.  அவ்வாறானதொரு குழு ஒன்று உருவாக்கப்பட்டு அது தீர்மானமாக நிறைவேற்றப்படுமானால், 2003ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகி இந்த நடைமுறைக்கு செல்லலாம்.  அவ்வாறு இல்லாவிட்டால் 2003ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து விலகமுடியாது என்பதை தொழிற்சங்கங்கள் அழுத்தமாகக் கூற வேண்டும்.  ஆனால் தொழிற்சங்கங்கள் இன்று அவ்வாறு கூறுவதில்லை.  ஏனெனில் தொழிற்சங்கங்களுக்கும் இது தொடர்பில் போதிய தெளிவில்லை.  தற்போது இருக்கின்ற தொழிற்சங்க தலைவர்கள் 2003ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட சந்தர்ப்பத்தில் இருக்கவில்லை. எனவே, அது தொடர்பில் அவர்களுக்கு எதுவும் தெரியாது. இதுதான் அடிப்படை பிரச்சினையாகும்.

இரண்டு வருட வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் சம்பள ஒப்பந்தத்தால் கூட்டு ஒப்பந்தம் என அவர்கள் நினைக்கிறார்கள்.  இது சம்பள ஒப்பந்தமே தவிர கூட்டு ஒப்பந்தம் அல்ல. எனவே சம்பள ஒப்பந்தத்தையும்,  ஒப்பந்தத்தையும் வேறுபடுத்திக் காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.  

கூட்டு ஒப்பந்தம் என்பது தொழிலாளர்களுடைய அனைத்து விடயங்கள் தொடர்பானது. சம்பள ஒப்பந்தம் என்பது சம்பள விடயத்தை மாத்திரம் குறிப்பதாகும். எனவே இந்த விடயம் தொடர்பில் தொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் இருக்க வேண்டுமா? இல்லை வெளியேற வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும் சக்தி தொழிலாளர்களுக்கு இருக்கின்றது.  ஏனெனில் தோட்டத் தொழிலாளர்களும் கம்பனிகளில் ஒரு 10வீத பங்காளர்களாவர்.  எனவே இதில் நீடிப்பதா? இல்லை வெளியேறுவதா? என்பதை தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் மாத்திரமன்றி கம்பனியின் பங்காளர்களாக தீர்மானிக்கும் சக்தி அவர்களுக்கு இருக்கின்றது.  கம்பனிகளின் பங்காளர்களாக அவர்கள் அதை சட்டரீதியாக அணுகுவார்களாக இருந்தால் கம்பனிகளால் நினைத்தாபோல இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முடியாது.  இதை தொழிற்சங்கங்கள் சட்டரீதியாக நடைமுறையில் எடுக்க வேண்டும்.  ஆனால், தொழிற்சங்கங்களுக்கு அந்தளவு போதிய அறிவு இருக்கின்றதா? விளக்கம் இருக்கின்றதா? தெளிவாக இருக்கின்றதா? என்பதே முதலாவது கேள்வியாக இருக்கின்றது.  கம்பனிகள் போன்று தொழிற்சங்கள் போதிய அறிவுடன் போதிய தகவல்களுடன் இதில் ஈடுபடுகின்றனவா? என்பதும் கேள்வியாக இருக்கின்றது.

கேள்வி -  அப்படியானால் இந்த விடயத்தில் தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டுமா? அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடியுமா?

பதில் - நீதிமன்றத்தை நாட வேண்டியதில்லை. தொழிற்சங்கங்கள் முதலாவதாக பேச்சுவார்த்தையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொழிலாளர்களை முடக்கி கம்பனிகளுக்கு பொருளாதார ரீதியான தாக்கங்களைக கொண்டுவரக்கூடிய அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும்.  கம்பனிக்காரர்கள் தங்களது இலாபத்தில் எப்போது பாதிப்பு ஏற்படுகின்றதோ அப்போதுதான் இதன் பாரதூர தன்மையை அவர்கள் புரிந்து கொள்வார்கள். தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைக்கு சென்று அவர்களுக்கு இலாபத்தை ஈட்டிக் கொடுத்துக்கொண்டே எங்களுக்கு அதைத் தரவேண்டும்,  இதை தரவேண்டும் என்று கூறினால் அவர்கள் அதனைக் கருத்திற் கொள்ள4மாட்டார்கள்.

தொழிலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் தங்களுக்கு வருமானம் குறையப்போகின்றது, இலாபம் குறையப்போகின்றது, பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் குறையப்போகின்றன என்பது தெரிந்தால் மாத்திரமே கம்பனிகள்  இதை உணரும்.  கம்பனிகளுக்கு பணத்தின் மூலமாக தாக்கத்தை ஏற்படுத்தினால்தான், அவை இதை உணரும். எனவே கம்பனிகளின் மீது பொருளாதார ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். இதற்கு தோட்ட மக்களும் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்கள் இணைய வேண்டும். பொருளாதார ரீதியாக அழுத்தம் ஏற்படுமாக இருந்தால் குறிப்பாக தேயிலை உற்பத்தி குறைவாக இருந்தால், அந்நிய செலாவணி குறைவதன் காரணமாக அரசாங்கத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். அந்நிய செலாவணி வருமானம் குறைவதன் காரணமாக அரசாங்கத்திற்கும் இதில் பெரிய பொருளாதார தாக்கம் இருப்பதனால்? அரசாங்கம் இதற்கு முக்கியத்துவமளிக்கும். எனவே அவ்வாறான ஒரு நிலைக்கு செல்வதா? இல்லையா? என்பதே எதிர்காலத்தில் இது தொடர்பான கலந்துரையாடலாக இருக்க வேண்டும். - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image