2019இல் ஆட்சேர்க்கப்பட்டு நிரந்தர நியமனம் கிடைக்காதுள்ள நூற்றுக்கணக்கான பட்டதாரிகள்
மத்திய அரசாங்கத்தில் இருந்து மாகாண அரசாங்கத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 2019ஆம் ஆண்டு ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு, இதுவரையில் நிரந்தர நியமனம் வழங்கப்படாதுள்ளமை தொடர்பில், அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் தலைவர் லக்மால் திசாநாயக்க, இன்று இந்தக் கடிதத்தை அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1. 2019ஆம் ஆண்டு ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.
2. எனினும், மத்திய அரசாங்கத்தில் இருந்து மாகாண அரசாங்கத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்ட தென் மற்றும் சப்ரகமுவ மாகாண பயிலுனர்கள் தவிர்ந்து, ஏனைய ஏழு மாகாணங்களின் பட்டதாரிகளுக்கும் இதுவரையில் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
3. இந்த விடயம் தொடர்பில் அனைத்து, மாகாண பிரதான செயலாளர்களுக்கும் எமது சங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், அந்த பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மத்திய அரசாங்கத்தில் இருந்து மாகாண அரசாங்கத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களின் பெயர் பட்டியில் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தற்போது ஒரு மாதத்திற்கு அதிக காலம் கடந்துள்ளது.
4. இது தொடர்பில் நீங்கள் கவனம் செலுத்தி மாகாண அரசாங்கத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாத பயிலுனர் பட்டதாரிகளின் விபரம்.
கிழக்கு மாகாணம் 86 பேர்
வடமேல் மாகாணம் 70 பேர்
மேல் மாகாணம் 43 பேர்
வடமாகாணம் 17 பேர்
மத்திய மாகாணம் 12 பேர்
ஊவா மாகாணம் 7 பேர்
வடமத்திய மாகாணம் 5 பேர்
தொடர்புடைய செய்திகள் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கியதில் பல பிரச்சினைகள்
வேலையில்லா பட்டதாரிகள் போராட்டத்திற்கு மீண்டும் வெற்றி கிட்டுமா?