மின் துண்டிப்பை 2 மணித்தியாலம் குறைக்க வேண்டும்: PUCSL 5 பரிந்துரைகள்
இன்றைய தினம் திட்டமிட்ட மின்சார துண்டிப்பை 2 மணித்தியாலம் குறைக்க வேண்டுமென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (03) விடுத்துள்ள அறிவித்தலில்
*நாளைய தினம் திட்டமிட்ட மின்சார துண்டிப்பை 2 மணித்தியாலம் குறைக்க வேண்டுமென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிட்டுள்ளது*
நாளை (2022 ஏப்ரல் 4) ஏழு மணித்தியால மின்துண்டிப்பு செய்ய இலங்கை மின்சார சபை ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியிருந்தது, அந்த கோரிக்கைகைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை. முறையான செயல்பாட்டின் மூலம் நாளைய தினம் மின்துண்டிப்பை 2மணிநேரம் குறைக்க வேண்டுமெனவும் அதனை எவ்வாறு செயற்படுத்தலாம் என ஐந்து பரிந்துரைகளை குறிப்பிட்டுள்ளது.
அந்த பரிந்துரைகளாவன;
1. களனிதிஸ்ஸ மின்உற்பத்தி நிலையத்தை 24 மணித்தியாலங்களும் செயல்படுத்தல்.
2. தற்போது அதிகபட்சமான செயல்பாட்டில் இல்லாத சோஜிஸ்ட் மின் உற்பத்தி நிலையத்தில் மேலும் 33 மெகாவாட் அளவு மின்சாரத்தை உற்பத்திக்காக இணைத்தல்.
3. தற்போது உற்பத்தியில் மெகாவாட் 20கும் குறைந்த செயல்பாட்டில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் மின் உற்பத்தி நிலையத்தில் அதிகபட்சமாக மின்னுற்பத்தியை உற்பத்தி செய்தல்.
4. மதுகம, துல்ஹிரிய மற்றும் கொலொன்னாவ ஆகிய மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைத்தல்.
5. செயற்பாட்டில் இல்லாத தனியார் மின்சார உற்பத்தி நிலையமான ஏசியா பவரில் சேகரித்து வைத்துள்ள எரிபொருள் (பர்னஸ் ஒயில்) எண்ணெயை இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த ஏ மற்றும் பீ மின்நிலையங்களுக்கு வழங்கல்.
இந்த ஐந்து பரிந்துரைகளையும் உடனடியாக நடைமுறைப்படுத்தி நாளை முதல் மின்துண்டிப்பை ஐந்து மணி நேரமாக குறைக்க வேண்டுமென ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்துள்ளது