கொரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகள் சிலவற்றில் தயாரிக்கப்பட்டுள்ள நான்கு தடுப்பூசிகள் தொடர்பில் மருத்துவ ஆராய்ச்சி சபை பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
சுகாதார அமைச்சும், மேலும் சில தரப்பினரும் இணைந்து கலந்துரையாடி, எந்த தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரலாம் என்பது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் மருத்துவ ஆராய்ச்சி சபை தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ள 4 தடுப்பூசிகளையும் கொண்டுவருவதற்கு எதிர்பார்ப்பதாக மருத்துவ ஆராய்ச்சி சபையின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அவதானம் செலுத்தப்பட்டுள்ளது நான்கு தடுப்பூசிகளில், பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சி சபை தெரிவித்துள்ளது.
அந்த தடுப்பூசியை ஒரு சாதாரண குளிர்சாதனத்தில் நிலவும் வெப்பநிலையில் பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள மொடெனா தடுப்பூசி, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள பைசர் பயோன்டெக் தடுப்பூசி, ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் 5 தடுப்பூசி என்பனவற்றை இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகின்றது.
மூலம் : சூரியன் எவ் எம் செய்திகள்