பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15,000 ரூபா தீபாவளி முற்பணம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15,000 ரூபா தீபாவளி முற்பணம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாய் வழங்க முதலாளிமார் சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

கண்டியில் நேற்று (04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் துயரங்களைக் கடந்தே தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர்.

மாதாந்த ஊதியத்தையும் சம்பள முற்பணத்தையும் நம்பியே தோட்டத் தொழிலாளர்கள் ஒரு மாதத்தைக் கொண்டு நடத்துகின்றனர். அதிலும் கூட ஒருசில தொழிலாளர் குடும்பங்களில் பிள்ளைகளின் கற்றலுக்கான செலவுடன் ஒரு மாதத்துக்கு போதுமான வருமானமின்றி, ஒரு நேர உணவை மட்டுமே உண்ணுபவர்களும் இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், தீபாவளிப் பண்டிகைக்காக பெருந்தோட்டங்களில் வழங்கப்படுகின்ற பண்டிகை முற்பணத்தை கருத்திற்கொண்டே தொழிலாளர்கள் தங்களது பண்டிகைக்கான செலவுகளை செய்ய திட்டமிடுவர்.

ஆடம்பரமான கொண்டாட்டங்களாக இல்லாவிட்டாலும் அவர்களது சிறிய சந்தோஷத்துக்காக இந்த பண்டிகை முற்பணத்தை திட்டமிட்டு செலவுசெய்வர். ஆனால், பெருந்தோட்டப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இந்த பண்டிகை முற்பணம் முறையாக வழங்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டுகளும் கடந்த காலங்களிலிருந்து இருந்து தான் வருகின்றது. அதுபோலவே இந்த வருடமும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் பெரும் துயரத்தைக் கொடுத்துள்ளன.

இதனை கருத்திற் கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் நான் முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடி தீபாவளி முற்பணமாக கடந்த கால தொகையை விட அதிகமாக வழங்குமாறு வலியுறுத்தினேன்.

கடந்த வருடம் 10000 ரூபா தீபாவளி முற்பணமாக வழங்கியிருந்தனர். இந்த காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை கருத்திற்கொண்டு நாம் அதையும் விட அதிகமான தொகையை வழங்க வேண்டும் என கோரியிருந்தோம்.

இதனை ஏற்றுக்கொண்ட முதலாளிமார் சம்மேளனம் தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாவை வழங்க தீர்மானித்து. அதற்கான சுற்றுநிரூபத்தை பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அதற்கமைய பெரும்பாலன கம்பனிகள் தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாவை வழங்க தீர்மானித்துள்ளது. ஓரிரு கம்பனிகள் இந்த தீபாவளி முற்பணத்தை வழங்க தவறும் பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் மிகவும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

எனவே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்பொழுதும் மக்களின் நலன் கருதி சேவை செய்யக்கூடிய ஒரு தொழிற்சங்கம் என்று மீண்டும் நிருபித்துள்ளது என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image